கேள்வி - 1

M.A.Jeanfer Christo. B.Tech.AME - Bangalore

13/2/2012,Monday

நான் இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்ற ஓர் ஆவிக்குரிய விசுவாசி. அபிஷேகம் பெற்ற ஆவிக்குரிய மக்களுக்கு சிலைவழிபாடும், படங்களும் தேவையா?

    பதில்

  அபிஷேகமும் – அபிஷேக வாழ்வும்:

  இங்கே “தேவையா” என்று கேட்பது, அவரவர்களுடைய “ஆத்மீக – இருத்தலின்” அடிப்படையில் விடை பகர வேண்டிய ஒன்று.

  “அபிஷேகம் பெறுவது” வேறு, “அபிஷேக வாழ்வு” வேறு.

  ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கு, சிலையோ, படங்களோ பெரிய அளவில் ஜெபிப்பதற்கு உதவியாயிருக்காது.

  அபிஷேகம் பெற்று, ஆனால் இரட்சிப்பில் பின்வாங்கி வாழ்பவர்களுக்கும், “உலக கிறிஸ்தவர்களுக்கும்” பெரிய வேறுபாடு இல்லை.

  உலக கிறிஸ்தவர்கள் – ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள்:

  “உலக கிறிஸ்தவர்களுக்கு” படங்களும், சிலைகளும், வழிபாட்டுக்கு தேவைப்படும்.

  காரணம், அவர்கள் “வெளிப்புலன்கள் நிலை” யில் தான், இறைவனை வழிபடுகிறார்கள்.

  அவர்கள் கண்களுக்கு காணும்படியாக, ஏதேனும் ஒன்று இருந்தால், இறைவழிபாட்டுக்கு அது “தூண்டுதலாக” இருக்கும்.

  கண்களை மூடி ஜெபிப்பவருக்கும், ஆவிக்குரிய கிறிஸ்தவர்களுக்கும், அந்த நிலை இல்லை.

  எனவே, ஆவிக்குரிய கிறிஸ்தவர்களுக்கு, படங்களோ, சிலைகளோ தேவைப்படுவதில்லை.

  தேவைப்படுவதும் – வைத்திருப்பதும்:

  இறைவழிபாட்டுக்கு, படங்களும், சிலைகளும் “தேவைப்படுவது” என்பது வேறு, வழிபடுகிற இட்த்தில், இவை “இருப்பது” என்பது வேறு.

  வழிபடும் எல்லாருமே, ஆவிக்குரியவர்களாக இருந்தால், வழிபடும் இடத்தில், இவை “இருப்பது” தேவை இல்லை தான்.

  ஆனால், வீடுகளிலும் சரி, சபைகளிலும் சரி, வழிபடுகிற இட்த்தில், உலக கிறிஸ்தவர்களும், ஆவிக்குரிய கிறிஸ்தவர்களும் சேர்ந்து இருக்கும் போது, உலக கிறிஸ்தவர்களுக்கு ஜெபிக்க, அந்த படங்கள், தூண்டுதலாக இருக்கும்.

  ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள், கண்களை மூடி ஜெபிப்பதால், படங்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

  உலக கிறிஸ்தவர்கள், “வளர்ந்து” ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் ஆகும் போது, இருபாலருக்கும், படங்கள், வழிபாட்டுக்கு தேவைப்படாது.

  ஆனால், அவர்கள் வளருவது வரை, ஆவிக்குரியவர்கள், அன்போடும், பொறுமையோடும், கரிசனையோடும், நடந்து கொள்ள வேண்டும்.

கேள்வி - 2

W.JENIFER.Msc.BEd - Kulasekaram

11/2/2012,Saturday

கத்தோலிக்கர்கள் ஞாயிறு ஆராதனையை “பூசை” என்றும், “திருப்பலி” என்றும், நற்கருணையை “நன்மை” என்றும் கூறுகிறார்கள். ஆனால், புராட்டஸ்டண்டு சபையினர், “திருவிருந்து” “கம்யூனியன் சர்வீஸ்” என்றும் கூறுகிறார்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

    பதில்

  பெயர்::

  “யூக்கறிஸ்தியா” (Eucharistia) என்ற கிரேக்க வார்த்தைக்கு “நன்றி செலுத்துதல்” என்பது பொருள்.

  இந்த வார்த்தையிலிருந்து தான், “யூக்கிறிஸ்து” என்ற ஆங்கில வார்த்தை வந்த்து.

  “அப்பம் பிட்கும்” ஞாயிறு வழிபாட்டிற்கு இவ்வாறு “யூக்கிறிஸ்து” எங்கிறோம்.

  “ஈத்தே மிசா எஸ்த் (ite missa est) எனறு, ஆராதனையின் முடிவில் கூறும் வார்த்தைக்கு – “சென்று வரலாம்” என்ற பெயர் வந்த்து.

  இதிலிறுந்து தான், “மாஸ்” (Mass) என்ற பெயர் வந்த்து.

  “கம்யூனியன்” (Communion) என்றால், பகிர்ந்து கொள்வது, நட்புறவு, பங்குகொள்வது, என்ற பொருள்கள் உள்ளன.

  இந்த பொருளோடு, அப்பம் பகிர்ந்து உண்ணுதலை கம்யூனியன் என்று கூறுகொறோம்.

  தமிழ் பெயர்:

  இந்த “பூசை” என்று கூறியது, மொழிபெயர்ப்பாளர்.

  கிறிஸ்தவ திருமறை, வழிபாடு, போன்றவற்றை, “மொழிபெயர்த்து” தந்த போது, இந்து சமயத்தார்க்கு அவர்கள் புரியும்படியான, பழக்கப்பட்ட சொற்களை, இங்கும் பயன்படுத்தினர்.

  இந்து சமயத்தில் வழிபாடுகளில் பூக்களைப் பயன்படுத்தி, இறைவனை வழிபடனர். எனவே அது “பூசை” ஆயிற்று.

  அவ்வாறே வழிபாடு நட்த்தியவர், “பூசாரி” என்று அறியப்பட்டார்.

  அந்த “பூசை” வார்த்தையையே, கத்தோலிக்கர்கள் இதிலும் பயன்படுத்தினர்.

  திருப்பலி – திருவிருந்து:

  நற்கருணை வழிபாடு, திருப்பலி என்றும், திருவிருந்து என்றும் அழைக்கப்படுகிறது.

  பெரிய வியாழன், பெரிய வெள்ளி ஆகிய இரண்டு நாட்களையும் சேர்த்து, நினைவு கூருவது தான், திருப்பலி.

  பெரிய வியாழனில், “இதை வாங்கி உண்ணுங்கள், இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் சரீரம் – சிந்தப்படும் என் இரத்தம்”, என்று இயேசு கூறினார்.

  பெரிய வெள்ளியில், கல்வாரியில் இரத்தம் சிந்தினார், உடலைக் கையளித்தார்.

  பெரிய வயாழன் நடப்பது, “விருந்து”, பெரிய வெள்ளி நடப்பது “பலி”.

  இயேசுவின் பலியைத்தான், நாம் விருந்தாக உண்கிறோம்.

  எனவே இதை, “பலிவிருந்து” என்று கூறுவது அதிக பொருத்தமாக இருக்கும்.

கேள்வி - 3


T.N.ANNES BENUSHA - Msc -Midalakadu

9/2/2012,Thursday

நான் ஓர் ஆவிக்குரிய அபிஷேகம் பெற்ற கத்தோலிக்கர். அபிஷேகத்துக்கு முன், நான் மாதா ஜெபமாலை சொல்வதுண்டு. இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?

    பதில்

  1. மாதா ஜெபமாலை:

  “மாதா ஜெபமாலை” கத்தோலிக்க சபையில் நுழைந்தது, “மரியன்னை பக்தி மூலமாக”.

  மரியன்னை பக்தியை வளர்ப்பதற்கென்றே, கத்தோலிக்க சபையில், சில துறவற இயக்கங்கள் உள்ளன. இது அவர்கள் முழுநேரப் பணி.

  எந்த ஒரு “பக்தி முயற்சியும்” ஆத்மீகத்தின் தொடக்க நிலையே. அவ்வண்ணமே, மாதா ஜெபமாலையும்.

  2. பக்தி நிலையும் - விசுவாச நிலையும்:

  கிறிஸ்தவ ஆத்மீகத்தில், “பக்தி நிலையிலிருந்து”, “விசுவாச நிலைக்கு” மக்கள் வளர வேண்டும் - அவர்களைத் திருச்சபை வளர்க்க வேண்டும்.

  “பக்தி நிலை” என்பது, ஆத்மீக வளர்ச்சியின் “ஏணிப்படியே”.

  ஒருவருடைய பக்தி நிலையின் “ஜெப முறைகள்” அவரை, “விசுவாச நிலைக்கு” உயர்த்தும் போது, அங்கே அவரது “ஜெப முறையும்” மாறுகிறது.

  ஜெப முறைகள், வளர்ச்சிக்கான ஏணிப்படிகள் மட்டுமே. அந்த ஏணியிலேயே அமர்ந்து விடுவதும், மக்களை அமர வைப்பதும், ஞானமல்ல.

  3. ஸ்தோத்திர ஜெபமும் - பரவச ஜெபமும்:

  விசுவாச நிலை என்பது, ஒருவர் “இரட்சிப்பு – அபிஷேகம்” பெறும் நிலை.

  அங்கே ஜெப வாழ்வு என்பது, “ஸ்தோத்திர ஜெபம்” – லூக் 24:53, பரவச ஜெபம் - தி.ப 2:1-4, 4:31, 10:10, 22:17.

  மேற்சொன்ன ஜெபங்களெல்லாம், “விசுவாசியின் ஜெபம்”.

  தூய ஆவியால் அபிஷேகம் பெற்ற மரியன்னை – லூக் 1:35,41, “செய்த ஜெபமாலை” “ஸ்தோத்திர ஜெபமும்” – தி.பா 1:14, லூக் 24:53, “பரவச ஜெபமும்” – தி.ப 2:1-4.

  4. நிறைவானதும், குறைவானதும்:

  நிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்து போகும் - 1கொரி 13:10,11.

  ஜெபமாலை செய்வது பாவமல்ல.

  இருளில்இருப்பவர்க்கு “மெழுகுதிரியின் ஒளி” உயர்ந்தது.

  பகல் வெளிச்சத்தில் இருப்பவர்க்கு, மேற்சொன்ன ஒளி தேவையா என்பதை, அவரவர் ஆத்மீக நிலையில் முடிவெடுக்க வேண்டும்.

கேள்வி - 4


T.N.ANNES BENUSHA - Msc -Midalakadu

9/2/2012,Thursday

யாக்கோபு திருட்டுத்தனமாக தன் சகோதரனுக்கு வர வேண்டிய ஆசீரை பெற்ற போதும், அவர் ஆசீர்வதிக்கப்பட காரணம் என்ன?

    பதில்

  1. யாக்கோபின் ஏமாற்று:

  யாக்கோபு ஏமாற்றினார் என்ற நிகழ்ச்சியின் உண்மையை அறிய, தொ.நூ 27:5-13 வசனங்களை நாம் முதலில் படிக்க வேண்டும்.

  இந்த காரியத்தை செய்வது, யாக்கோபின் தாய் - தொ.நூ 27:6-8.

  இந்த செயலால் சாபம் வருவதாயிருந்தால், அதை தாமே ஏற்றுக்கொள்வதாக தாய் கூறினார் - தொ.நூ 27:13.

  இது ஏமாற்று அல்லவா என்று யாக்கோபு பயப்படுவதையும் நாம் காண்கிறோம் - தொ.நூ 27:12.

  எனவே, “ இந்தக் காரியம் கர்த்தரால் ஆனது” என்று மட்டுமே நாம் கொள்ள வேண்டும் - தொ.நூ 24:5.

  கடவுளுடைய பெரிய விருப்பம் ஒன்றை, ஈசாக்கின் தலைமுறையில் நிறைவேற்ற, கடவுள் திட்டம் கொண்டார் - தொ.நூ 26:2-5.

  இதில், ஈசாக்கின் இரண்டு பிள்ளைகளிலும், ஏசாயு அதற்கு தகுதியில்லாதவன் என்பதை, கடவுள் ஏற்கெனவே வெளிப்படுத்தினார் - தொ.நூ 25:30-34.

  எசாயு, “தலைமகனுக்குரிய ஆசீரை” அசட்டை செய்தவன் என்பதை, இங்கே காண்கிறோம்.

  ஆனால் கடவுள் எசாயுவையும் ஆசீர்வதித்தார் - தொ.நூ 33:9, 36:1-43.

  2. கடவுளின் செயல்:

  பைபிளில் ஒவ்வொரு வசனமும், நிகழ்ச்சியும், பகுதியும், என்ன பொருளோடு பார்க்க வேண்டும் என்று, ஒரு விதி உண்டு.

  பைபிள் என்பது, “மனிதனுடைய மீட்பின் சரித்திரம்” அடங்கிய திருநூல்.

  “மீட்பின் சரித்திரம்” என்பது, “கடவுளுடைய கரம், மனித சரித்திரத்தில் செயலாற்றுவது”.

  கடவுள் பைபிளில் ஒன்றை “செய்கிறார்” , “சொல்கிறார்” , “அனுமதிக்கிறார்” என்றால், அங்கே கடவுளின் “அன்பையும்” மனித மீட்பைப் பற்றிய கடவுளுடைய “அக்கரையையும்” நாம் பார்க்கத் தவறக் கூடாது.

  இதுவே ஒரு விசுவாசி, பைபிளைப் படிக்க வேண்டிய விதம்.

  அப்படி செய்தால், பைபிளில், “வசனங்கள்” அல்ல, “சத்தியங்கள்” நம் கண்ணுக்கு புலப்படும்.

  இங்கே, தாங்கள் கேட்ட கேள்வி, “வசனம்”, நாம் கொடுத்த விளக்கம், “சத்தியம்”.

கேள்வி -5


Arul Shiji, Bahrain

8/2/2012,Tuesday

Dear Father, உத்தரிக்கும் ஸ்தலம், நரகம், இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

    பதில்

  பைபிள் கூறும் நரகமும், நாம் கூறும் உத்தரிக்கும் ஸ்தலமும், அதன் தன்மைகளில் ஒன்றே. பெயரில் தான், வேறுபாடு.

  தாங்கள், தயவு செய்து, CPM பாடப்பகுதி, காலங்களுக்கொத்த செய்திகளில் வரும், "உத்தரிக்கும் ஸ்தலம்" என்ற தலைப்பை, மீண்டும் ஒரு முறை படித்தால், இந்த கேள்விக்கு உரிய பதில் கிடைக்கும்.

  அதற்கு மேலும், விளக்கங்கள் தேவைப்பட்டால், தாங்கள் தொடர்ந்து எங்களிடம் கேட்கலாம். நல்ல பதில் நிச்சயம் கிடைக்கும்.

கேள்வி - 6


Arul Shiji, Bahrain

8/2/2012,Tuesday

Dear Father, பைபிளில் உள்ள தாலந்து உவமையில், "உள்ளவனுக்கு கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு தெளிவான அர்த்தம் புரியவில்லை. தயவு செய்து விளக்குவீர்களா.

    பதில்

  "உள்ளவனுக்கு கொடுக்கப்படும். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என்ற வசனம், மத் 25 : 29 -ல் வருகிறது.

  என்ன உள்ளவர் ?

  நம்பிக்கைக்கு உரிய பணியாளராக உள்ளவர் - மத் 25 : 21 .

  சிறிய பொறுப்புகளிலும், நம்பிக்கைக்கு உரியவராக உள்ளவர் - மத் 25 : 21 .

  சோம்பலில்லாமல் சுறு சுறுப்பாக உள்ளவர் - மத் 25 : 26.

  என்ன இல்லாதவர் ?

  நம்பிக்கைக்கு உரியவராய் இல்லாதவர்.

  நல்ல பணியாளராக இல்லாதவர்.

  சிறிய பொறுப்புக்களிலும், அர்ப்பணம் இல்லாதவர்.

  இறை வாழ்வில் சுறுசுறுப்பு இல்லாதவர் .

  எது எடுக்கப்படும்?

  இந்த வசனங்கள் தாலந்து உவமையில் வருகின்றன - மத் 25 : 14 - 30 .

  இதில், தாலந்து என்பது, "இறை ஆசீரை" குறிக்கிறது. (விண்ணக, மண்ணக).

  ஒவ்வொரு விசுவாசிக்கும், பெற்றுக்கொண்ட "ஆசீரை" தக்க வைப்பதற்கும், வளர்ப்பதற்கும், கடமை உண்டு.

  தமது, அசட்டைத்தனத்தால், இறை ஆசீரைப் பற்றி, அக்கரையற்றவராயிருந்தால், அந்த ஆசீர், அவரிடமிருந்து, எடுக்கப்படும்.

  பெற்றுக்கொண்ட ஆசீரை, தக்க வைப்பதிலும், வளர்ப்பதிலும், சுறு சுறுப்பாயிருந்து, தேவ பாதத்தில் உழைப்பவர்களுக்கு, இறை ஆசீர் இன்னும் விருத்தியடையும்.

கேள்வி - 7


V.Anthoni Raj, Sivakasi

29/9/2013,Sunday

அய்யா எனக்கு சங்கீதம் 137.9 வசனத்திற்கு விளக்கம் தாருங்கள் எனது வீட்டின் பக்கத்தில் ஒரு முஸ்லீம் குடும்பம் உள்ளது அவர்கள் இந்த வசனத்தை சொல்லி என்னை நக்கல் அடிக்கிறார்கள் தயவுசெய்து SOLLUNKAL.

    பதில்

  "வினை விதைத்தவன் வினை அறுப்பான். பாபிலோன் இஸ்ராயேலுக்குச் செய்த தீமைகள் அவர்கள் மேலும், அவர்கள் பிள்ளைகள் மேலும் பழியாக வந்து விழும், என்பது தான் கருத்து. தண்டனையில்லாத பாவம் ஏதுமில்லை. அவ்வாறே, பாபிலோனின் பாவத்திற்கும் தண்டனை உண்டு.

கேள்வி - 8


Jeyaseeli, Thirunelveli

16/12/2013,Monday

நான் கத்தோலிக்க திருச்சபையை சார்ந்தவள் . நான் ஜெபிக்கிறேன்.நான் ஜெபித்தது கிடைக்கவில்லை என்றால் சோர்த்து விடுகிறேன் .திரும்ப என்னால் ஜெபிக்க முடியவில்லை .எப்படி ஜெபிக்க வேண்டும். விசுவாசம் எப்படி கொள்ள வேண்டும் என்று சொல்லவும் .

    பதில்

  "1யோவா 5:14 – ன் படி நாம் ஜெபிக்க வேண்டும்."

  • விசுவாசம் இரண்டு வகைப்படும்.

  • 1. விடுதலைக்கான விசுவாசம்.

  • 2. மீட்புக்கான விசுவாசம்.

  • விடுதலை என்பது, சாபத்தினின்று. மீட்பு என்பது, பாவத்தினின்று.

   விடுதலை அடைய, இயேசுவால் இந்த காரியம் கூடும் என்று விசுவசிக்க வேண்டும். பாவத்தினின்று விடுதலை அடைய, இயேசு கிறிஸ்துவின் மீட்புச் செயல்களின் மேல் விசுவாசம் கொள்ள வேண்டும். (உரோ 3:24,25, மாற் 16:16, தி.பா 16:31-33, 1திமொ 1:15).

   மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள - 9443604787.

கேள்வி - 9


Retnaswamy - Thipramalai, Marthandam

03/01/2014,Friday

Why we have to worship God?

    பதில்

  "We have to worship God because He is our Creator, Redeemer, Saviour, and Loving Father. Worship belongs to God and God alone. The believer who accepts His Divinity and Benevolence manifests them through worship."

  For details please contact - 9443604787.

கேள்வி - 10


D.Ilakkiyaselvan , sirkali

09/01/2014,Thursday

முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது மிருகங்களா? தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார் தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:25-27 இந்த வசனங்களில் முதலில் மிருகங்கள் மற்றும் ஆகாயத்து பறவைகள் படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. அதோடு கூடுதலாக அவற்றை ஆளும் சக்தியையும் மனிதனுக்கு கர்த்தர் கொடுத்ததாகவும் சொல்லப்படுகின்றது.

ஆனால், இதற்கு மாற்றமாக இதே ஆதியாகமத்தில் சொல்லப்படும் மற்றொரு செய்தியை பாருங்கள்: பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:18-19 இந்த வசனங்களில் மனிதன் படைத்தபின்னர் தான் அனைத்து மிருகங்களும் ஆகாயத்துப் பறவைகளும் உண்டாக்கப்பட்டதாகவும், அந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பெயர் வைத்ததே ஆதாம் தான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் மிருகங்களைப் படைத்ததற்குப் பின்னர் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது?

    பதில்

  "அன்பு நண்பரே, தங்கள் கேள்வி, முற்றிலும் உண்மையானதே. வேதத்தில் குறிப்பாக ஆதி ஆகமத்தில், ஒரே நிகழ்ச்சி, இரண்டு முறை வருகின்ற வேறு வசனங்களும் உள்ளன. (தொ.நூ 6:19, 7:3,4). "

  இதிலிருந்து சில உண்மைகள் நமக்கு தெரிய வேண்டும்.

  பைபிள் பல காலங்களில், பல ஆசிரியர்களால் எழுதப்பட்டு, கடைசியில் ஒரு நூலாக கோர்க்கப்பட்டது. குறிப்பாக, முதல் ஐந்து புத்தகங்களில் வரும் நிகழ்ச்சிகள், ஒரே நிகழ்ச்சிகளை, வேறு வேறு ஆசிரியர்கள், வேறு வேறு காலங்களில் எழுதினார்கள். இதனை வேத ஆசிரியர்கள், JEDP பாரம்பரிய எழுத்துக்கள் என்று கூறுவர்.

  தாங்கள் குறிப்பிட்ட இரண்டு நிகழ்ச்சிகளும், JE என்ற, இரண்டு பாரம்பரியங்களில் எழுதப்பட்டவை. நூலாசிரியர், பைபிளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் போது, இரண்டு பாரம்பரியங்களையும் ஒன்றாக சேர்த்து போட்டிருக்கின்றார்.

  மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள - 9443604787.

கேள்வி - 11


Aqsa, Colombo

28/01/2014,Tuesday

நீங்கள் உண்மையான ஒரு கிறிஸ்துவர் என்றால்,பைபிளை முளுமையஹா (முழுமையாக) நீங்கள் வாசிதுல்லீர்ஹல் (வாசித்துள்ளீர்கள்) என்றால் இயேசு கடவுள்,என்னையே வழிபடுங்கள் என கூறிய ஒரு வசனத்தை பைபிளில் இருந்து எடுத்துக்காட்டுமாறு உங்களுக்கு நான் சவால் விடுஹிரென்.(விடுகிறேன்.) அப்படி நீங்கள் எடுத்துக் காட்டினால் நான் கிறிஸ்தவ மதத்தை விசுவாசிப்பேன்.

    பதில்

  அன்பரே! தங்கள் கேள்வியைப் பார்த்தேன். கேள்வியை இன்னும் சற்று “தமிழ் பண்போடு” கேட்டிருப்பின் நலமாயிருந்திருக்கும்.

  தங்களின் கேள்விக்கு நான் திருப்தியான பதில் கொடுக்கிறேனா என்பது தெரியவில்லை. காரணம், கேள்விக்குள்ளேயே ஆயிரம் குதர்க்கங்கள் காண்கிறேன்.

  இருப்பினும், தங்கள் நல்லெண்ணத்தை மதித்து, விடைதர முயல்கிறேன். தங்களுக்கு போதுமானதாக இருந்தால், ஏற்றுக்கொள்ளுங்கள்.

    I. இயேசு கூறுகிறார்

  கடவுளை நாம் வழிபட வேண்டும் - மத் 4:10 (இ.ச 6:13).

  எப்படி வழிபட வேண்டும்? – யோவா 4:24, எபி 12:28.

    II. இயேசுவே கடவுள் :

     A. இயேசு கூறுகிறார்:

   நானும் தந்தையும் (கடவுளும்) ஒன்றே – யோவா 10:30.

   “இறைவனாகிய – மனிதன்” - இறைமகன் நானே – யோவா 10:36.

   பழைய ஏற்பாட்டில் கூறிய, “இருக்கிறவர் - நானே” (வி.ப 3:14) என்ற, கடவுள் நானே – யோவா 8:24.

   என்னைக் காண்பது, தந்தையை (கடவுளைக்) காண்பது ஆகும் - யோவா 14:8,9,10.

      B.நற்செய்தி கூறுகிறது:

    வாக்கு (இயேசு) கடவுளாயிருந்தார் - யோவா 1:1.

    உலகை “கடவுள்” படைத்தார் என்று, பைபிள் கூறுகிறது – தொ.நூ 1:1. ஆனால், அந்த கடவுள் இயேசுவே என்று, நற்செய்தி கூறுகிறது – யோவா 1:3,10.

       C. பவுல் கூறுகிறார்:

     அனைத்தும் இயேசுவால் படைக்கப்பட்டன – கொலோ 1:16,17.

     இயேசு கடவுளின் சாயல் - கொலோ 1:15.

     கடவுள் தன்மையின் முழு நிறைவும், உடலுருவில், கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது – கொலோ 2:9.

     இயேசு கடவுளாகிய மீட்பர் - 1திமொ 4:10, 2:3, 1:1.

     நம்மோடு வாழும் கடவுளே, மீட்பராகிய இயேசு – எபே 4:10.

       III. இயேசுவின் பெயரில் - கடவுள்:

     இயேசுவின் பெயர் - “இம்மானுவேல்”.

     இம்மானுவேல் என்றால், “கடவுள் நம்மோடு இருக்கிறார்” என்பது பொருள் - மத் 1:22,23.

       IV. இயேசு தன்னைக் கடவுள் என்று கூறியதால் - யூதர் அவரைக் கொன்றனர்:

     மனிதனாகிய நீ, உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய். எனவே, நாங்கள் உன்மேல் கல் எறிகிறோம் - யோவா 10:33.

       V. பைபிள் இயேசுவை கடவுளாக வழிபட்டது:

     மூன்று ஞானிகள், இயேசுவை ஆராதித்தார்கள் - மத் 2:2, 2:11.

     திருத்தூதர்கள், இயேசுவை இறை மகன் (மனித உருவில் தோன்றிய கடவுள்) என்று கூறி ஆராதித்தனர் - மத் 14:33.

     சீடர்கள், இயேசுவின் காலடிகளைப் பற்றி, பணிந்து ஆராதித்தனர் - மத் 28:9.

கேள்வி - 12


Ravi, kuwait

24/02/2014, Monday

தயவு செய்து அதிசயம் அற்புதம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பற்றி சொல்லுங்கள். அவசரமாக தெரிந்துகொள்ள வேந்திய கட்டாயத்தில் உள்ளேன்.

    பதில்

    ஒரே பொருள் கொண்ட பல வார்த்தைகள்:

  “அதிசயம்” , “அற்புதம்” , “அடையாளம்” , என்ற மூன்று வார்த்தைகளும், பைபிளில் ஒரே பொருளைக் கொண்டவை.

  இதன் விளக்கத்தை கீழே தருகிறோம்.

    பைபிள் வார்த்தைகள்:

  - பைபிளில் இதற்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்:

  எபிரேயத்தில் 1. Pala – பாலா ; 2. Mofaith – மொபெய்த்

  கிரேக்கத்தில் - Teras – தெரெஸ்

    பொருள்:

  இவற்றின் பொருள் ஒரே மாதிரியானவை.

  ஆங்கிலத்தில் - Wonders, Miracles, Signs

  தமிழில்:

  • 1. அரியசெயல்

  • 2. ஆச்சரிய செயல்

  • 3. மிக உயர்ந்த செயல்

  • 4. செய்யற்க்கரிய செயல்

  • 5. அதிசயமான செயல்

  • 6. மகிமையான செயல்

  • 7. இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட “அடையாளம்”

  • 8. மனித சக்திக்கு மேற்பட்ட “அற்புதச் செயல்”

    யார் யார் இவற்றை செய்கிறார்கள்?:

  அலகை – வெளி 16:13,14, 13:13, 2தெச 2:7.

  பாவிகள் - மத் 7:22,23, 24:24.

  மந்திரவாதிகள் - வி.ப 7:11, 22, 8:7.

  தெய்வ மனிதர்கள் - யோவா 14:12, லூக் 9:1,2.

  இயேசு – யோவா 14:11, 2:11, 3:2, 6:2, 7:31.

  கடவுள் - வி.ப 3:20, யோசு 3:5.

    என்ன நோக்கத்தோடு செய்கிறார்கள்? :

  1. அலகை

  மனித கவனத்தை கடவுளிடமிருந்து திருப்ப, அலகை மேற்கொள்ளும் தந்திரச் செயல்களே இவை – வெளி 13:13, 2தெச 2:9.

  2. பாவிகள்

  உலக மாயையில் மயங்கி, நெறிதவறிப் போன, இறை ஊழியர்களுடைய பண ஆசையின் வெளித்தோற்றங்களே இவை – மாற் 13:22.

  3.மந்திரவாதிகள்

  தீய தொழில் புரியும், “பேயின் தூதர்களுடைய” செயல்கள் இவை – தி.ப 8:9-11.

  4. தெய்வ மனிதர்கள் :

  இறை ஊழியர்களுக்கு, கடவுள் வெளிப்படையாக, மக்கள் முன் தரும் அங்கீகாரச் செயல்களே இவை – தி.ப 2:43, மாற் 16:20.

  5. இயேசு :

  மனிதன் தன்னை மெசியா என்று விசுவசிக்க, அடையாளமாக இயேசு செய்த, மீட்பின் செயல்களே இவை – மத் 4:24.

  6. கடவுள்:

  மனித குல மீட்புக்காக, கடவுள் செய்யும் இரக்கச் செயல்.

  தானே கடவுள் என்பதை, மனிதன் அறிந்து கொள்ள, கடவுள் காட்டும் அடையாளச் செயல்கள்.

  விசுவாசிகளின் மனதை, கடவுள் திடப்படுத்தும் செயல் - தி.ப 77:14.

  For details please contact - 9443604787.

கேள்வி - 13


jeniferrayan, madurai

1/5/2014, Thursday

அய்யா , 49. பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன், அது அப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன். 51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன். 52. எப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள். 53. தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். லூக்கா – 12:49,51,52,53 34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன். 35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். மத்தேயு – 10:34,35 விளக்கம் தாருங்கள் பேஸ்புக் இணைய தளத்தில் முஸ்லீம் நபர்கள் இந்த வசனத்தை சொல்லி நக்கல் அடிக்கிறார்கள் தயவுசெய்து சொல்லுங்கள்.

    பதில்

  அன்பு சகோதரரே! தங்கள் கேள்விக்கான பதிலை, சுருக்கமாக கீழே தருகிறோம்.

    இயேசு கூறிய வார்த்தைகள் :

  மண்ணுலகில், தீயை மூட்டவே வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் - லூக்12:49

  மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை - லூக்12:51

  மண்ணுலகில், பிளவு உண்டாக்கவே வந்தேன் - லூக்12:51.

  இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும், மூவருக்கு எதிராக ஐவரும் பிரிந்திருப்பர் - லூக்12:52.

  தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.

  உலகுக்கு அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன் - மத்10:34.

  ஒருவருடைய பகைவர் அவருடைய வீட்டில் உள்ளவரே ஆவர் - 10:36.

    சத்தியத்தை ஏற்றலும் - விளைவும் :

  மேற்சொன்ன வசனங்கள், ஒரு சத்தியத்தை ஏற்பது அல்லது புறக்கணிப்பதன் “விளைவு” என்ற அடிப்படையிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும்.

  இயேசு போதித்த "சத்தியம்" மேற்சொன்ன வசனங்களைத் தொடர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.

  என்னை விட, தம் தந்தையிடமோ, தாயிடமோ "மிகுந்த அன்பு" கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர் - மத்10:37.

  என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ "மிகுதியாய் அன்பு" கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

  தன் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் "என்னுடையோர்" எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

  தம்உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். "என்பொருட்டு" தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.

    மனித மனத்தின் சாய்வும் - தீர்மானமும் :

  இரண்டு வேறுபட்ட காரியங்கள், ஒரு மனிதனுக்கு முன் நிற்கும் போது, அவனது மனம் எதன் பக்கம் "சாய்ந்துள்ளதோ" அதன்படியே அவனுடைய "தீர்மானமும்" இருக்கும்.

  ஒருவரின் "தீர்மானத்தின்" அடிப்படையிலேயே, மேற்சொன்ன பிரிவு, அமைதியின்மை, வாள், நெருப்பு, போன்ற விளைவுகள் உருவாகின்றன.

    இயேசுவின் உபதேச சத்தியங்களும் - இயேசுவும் :

  இயேசுவும், இயேசுவின் உபதேசங்களும் ஒன்றே.

  இயேசுவை ஏற்றுக்கொள்வது என்பது, அவரது உபதேசத்தை ஏற்றுக்கொள்வது ஆகும்.

  இயேசுவை சந்திக்கிற ஒருவர் இரண்டு முடிவுகளுக்கு மத்தியில் நிற்கிறார்.

  ஒன்று அவரை ஏற்றுக்கொள்வது, மற்றொன்று அவரை புறக்கணிப்பது.

    ஏற்றுக்கொள்வது அல்லது புறக்கணிப்பதும் – மனித “பற்றும்” :

  ஒருவருடைய “தீர்மானம்” அவர் ஒன்றில் வைத்திருக்கும் “பற்றின்” அடிப்படையிலேயே அமைகிறது.

  இயேசுவை ஒருவர் சந்திக்கும் போது, அவரது எதிர்புறம் அவர் மற்றொன்றையும் சந்திக்கிறார்.

  அதுவே உலகம், பிசாசு, சரீரம் என்ற எதிர்சக்திகள்.

  பொதுவாக, இயேசுவை சந்திக்கும் முன் ஒருவர் உறவுகள், உடமைகள், ஆசைகள் போன்றவற்றால் கவரப்பெற்று, உலகம், பிசாசு, சரீரத்தில் பற்றுக்கொண்டிருப்பார்.

  இந்நிலையில் இயேசுவை ஒருவர் பற்றிக்கொள்ள வேண்டுமென்றால், மேற்சொன்ன பற்றுக்களை ஒருவர் “துறந்து” தான் ஆகவேண்டும்.

  இந்த “பற்றறுத்தலின்” விளைவே, மேற்சொன்ன பிரிவு, நெருப்பு, வாள் போன்றவை.

    இயேசுவின் பொருட்டு – துறவு :

  என் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும்,

  “வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் - இம்மையிலும், மறுமையிலும் கைம்மாறு பெறுவர்” - மாற் 10:29,30.

  இறையாட்சியின் பொருட்டு,

  “வீட்டையோ, மனைவியையோ, சகோதரர் சகோதரிகளையோ, பெற்றோரையோ, பிள்ளைகளையோ விட்டுவிட்டவர் எவரும் - இம்மையிலும் மறுமையிலும் கைம்மாறு பெறுவர்” - லூக் 18:29,30.

  என் பொருட்டு,

  “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும், தம் உயிரைக் காத்துக் கொள்ளவிரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்” - லூக் 9:23,24.

    இரண்டு ஈர்ப்புக்களின் மத்தியில் மனிதன் :

  மேற்சொன்ன, இயேசுவின் உபதேச சத்தியங்களின் அடிப்படையில், மனிதன் இரண்டு பெரும் “ஈர்ப்புக்களுக்கு” மத்தியில் நிற்கிறான்.

  இயேசு – (என்பொருட்டு, நற்செய்தியின் பொருட்டு, இறையாட்சியின் பொருட்டு),

  உறவுகள், உடமைகள், ஆசைகளால் சூழப்பெற்ற உலகம், பிசாசு, சரீரம்.

    தீர்மானமும் - பிரச்சனையும் :

  இங்கே, தீர்மானம் அதாவது OPTION என்று வரும் போது, ஒன்றைப் “பற்றிக்” கொண்டு, மற்றதை “துறந்து” அல்லது “பிரிந்து” தான் ஆகவேண்டும்.

  இயேசுவை சந்திக்கும் போது, ஒருவர் இரண்டு வேறுபட்ட சக்திகளை சந்திக்கிறார் என்று பார்த்தோம்.

  அதாவது,

  • கடவுள் X அலகை,

  • தர்மம் X அதர்மம்,

  • உண்மை X பொய்,

  • அன்பு X பகை,

  • பழி X மன்னிப்பு,

  • ஆத்திரம் X பொறுமை,

  • பரிசுத்தம் X மாசு

  போன்றவை.

  இவற்றை இரண்டு “வழிகள்” என்று காண்கிறோம்.

  ஒன்று “கடவுள் வழி” மற்றொன்று “அலகை வழி” அல்லது “உலக வழி”.

  இதில், சிலர் “கடவுள் வழிகளை” பற்றி நிற்பர்.

  வேறு சிலர் “உலக வழிகளை” பற்றி நிற்பர்.

  ஓர் ஆளைப்பற்றி நிற்பதும் - அவர் வழிகளைப் பற்றி நிற்பதும் :

  ஒரு குடும்பம் என்று வரும்போது, அங்கே ஆட்களைப் பற்றி நிற்கும் நிலையைப் பார்க்கிறோம்.

  இங்கே, “ஆளா அல்லது வழியா” என்று பார்க்கும் போது, சிலர் குடும்பத்திலுள்ள ஆளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார், மற்றவர்கள் பின்பற்றும் வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

  ஆளைப் பற்றி நிற்பவர், வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.

  வழிகளைப் பற்றி நிற்பவர், ஆளுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்.

  இவ்வாறு, “இயேசுவின் வழிகளை” பின்பற்றுபவர், “உலக வழிகளை” பின்பற்றாதவரை பிரிந்து தான் ஆக வேண்டும்.

  இங்கே உறவா, உடமையா, ஆசையா X இயேசுவா என்று பார்க்கும் போது, இயேசுவைப் பற்றிக்கொண்டவர், உறவையும், உடமையையும், ஆசைகளையும் துறந்து அல்லது பிரிந்து தான் ஆக வேண்டும்.

  பிரிவும் துன்பமும் :

  இவ்வாறு உண்டாகும் பிரிவு சில வேளைகளில் துயரத்தைத் தரும், வேதனையைத் தரும், போராட்டங்களைத் தரும்.

  இதைக் குறித்தே இயேசு பிரிவு, பிளவு, வாள், நெருப்பு என்று கூறினார்

    பழைய ஏற்பாட்டில் முன்னுதாரணம் - வி.ப 32:26-29 :

  மோசே திருச்சட்டத்தைப் பெற்றுக் கொள்ள மலைக்குச் சென்றார்.

  அவர் திரும்பி வர காலம் தாழ்த்தவே, மக்கள் பொறுமை இழந்தனர்.

  தங்களுக்கென்று ஒரு கன்றுக்குட்டி செய்து வழிபட்டனர்.

  இதைக்கண்ட மோசே வருத்தமுற்றார், சினமுற்றார்.

  கடவுளைப் புறக்கணித்து, கன்றுகுட்டியை வணங்கியதால் மக்கள் பெரும் பாவம் செய்தனர்.

  ஆனாலும், கூட்டத்தில் எல்லாரும் இந்த பாவம் செய்யவில்லை.

  கடவுளைப் பற்றி நின்றவர்களும் - கன்றுக்குட்டியை பற்றி நின்றவர்களுமாக ஒரு “கலப்படக் கூட்டமே” மோசேக்கு முன் நின்றது.

  அப்போது மோசே இவ்வாறுகூறினார்:

  • (26) “ஆண்டவரது பக்கம் உறுதியாய் இருப்போர் என்னிடம் வாருங்கள்” என்றார். லேவியர் அனைவரும் அவரிடம் வந்து கூடினர்.

  • (27) அவர் அவர்களை நோக்கி: “இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: ஒவ்வொருவனும் தன் வாளை இடையில் செருகிக்கொண்டு, பாளையத்திற்குள் சுற்றிவந்து, வாயில்வாயிலாகக் கடந்து சென்று தன் சகோதரனையும், தன் நண்பனையும், தனக்கு அடுத்திருப்பவனையும் வெட்டி வீழ்த்த வேண்டும்” என்றார்.

  • (28) மோசேயின் வாக்குக் கிணங்க லேவியர் செயல்பட்டதால் அந்நாளில் மக்களுள் ஏறத்தாள மூவாயிரம் பேர் மடிந்தனர்.

  • (29) மோசே “புதல்வன், சகோதரன் என்று பாராது நீங்கள் செயல்பட்டு அவருக்காக இன்று உங்களை அர்ப்பணம் செய்து கொண்டடீர்கள். இதை முன்னிட்டு ஆண்டவர் உங்கள் மேல் ஆசி பொழிந்துள்ளார்” என்றார்.

  •   பிரிவும் துன்பமும் - ஏற்பு அல்லது புறக்கணிப்பதின் விளைவே :

   மேற்கண்ட நிகழ்ச்சியில் இந்த பாடம் தெளிவாகிறது.

   கடவுள் பக்கம் நின்றவர்கள் குடும்பத்தை, உறவுகளை, உடமைகளை துணிவோடு துறக்கும் அல்லது பிரியும் முறையை பார்த்தோம்.

   இதனால் ஏற்பட்ட “வாள்”, “நெருப்பு”, “அமைதியின்மை”, “பிளவு” அனைத்தையும் கண்டோம்.

     கி.மு – கிபி :

   இயேசு ஒரு “சகாப்தம்”.

   அவரது வருகையினால் உலகம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

   இதில் இயேசுவின் பக்கம் சேர்பவர்களுக்கும் - உலகத்தின் பக்கம் சேர்பவர்களுக்கும் இடையே உண்டாகும் “உறவு அழுத்தமே” நாம் கண்ட வசனங்களின் விளக்கம்.

   For details please contact - 9443604787.

கேள்வி - 14


Abishek, Chennai

18/5/2014, Sunday

Father naan abi 1 doubt. If any 1 got baptism in their church's why do they geting bptism again in our church. Is it right father?

    பதில்

  அன்பு மகனே ! தங்கள் கேள்வியில், இரண்டு தலைப்புகள் வருகின்றன.

  • ஞானஸ்நானம்

  • திருச்சபை

  இவை இரண்டிற்கும் பைபிளில் மிக ஆழமான அர்த்தங்கள் உள்ளன.

    1. ஞானஸ்நானம்

  ஞானஸ்நானம் என்பது, கடவுளோடு ஒருவருக்குள்ள உறவை வலுப்படுத்தும் “உடன்படிக்கைச் சடங்கு”. இந்த உடன்படிக்கைச் சடங்கில் “உடன்படிக்கை வார்த்தைகள்” முக்கியமானவை.

  திருமுழுக்குப் பெறும் ஒருவர், “உடன்படிக்கையின் வார்த்தைகளுக்கு வாழ்நாளெல்லாம் கட்டுப்பட்டு வாழ்வேன்” என்று, ஒரு சடங்கு மூலம், கடவுளுக்கு முன் வாக்குறுதி எடுத்துக் கொள்கிறார்.

  இன்று சமுதாயத்தில் நாம் காணும் திருமண உடன்படிக்கையை போன்றது.

  திருமண உடன்படிக்கை, எப்படி ஒருவரை புது உறவுக்கும், புது கட்டுப்பாட்டுக்கும், புது வாழ்வுக்கும் இட்டுச் செல்கிறதோ, அவ்வாறே ஞானஸ்நான உடன்படிக்கையும் ஆகும் - (2 கொரி 11:1,2).

  திருமணத்தைப் பற்றி சொல்லும் போது, நமது இடங்களில் குழந்தை திருமணங்கள், சட்டப்படி அங்கீகரிக்கபபடாத திருமணங்கள் என பல திருமணங்கள் நடப்பதைப் பார்க்கிறோம்.

  சட்டப்படியும், சமுதாய ஒழுங்கின்படியும் அங்கீகரிக்கப்பட்ட திருமண உடன்படிக்கைக்கும், மற்ற திருமணங்களுக்கும் எவ்வாறு அதிக வித்தியாசம் உண்டோ, அவ்வாறே பைபிளும் வரலாற்றுப் பாரம்பரியமும் கூறும் ஞானஸ்நானத்துக்கும், இதர ஞானஸ்நானங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

  ஞானஸ்நானம் என்பது சடங்கு மட்டுமல்ல, அது விளைவிக்கும் இறை உறவிலும், சபை உறவிலும் , கட்டுப்பாட்டிலும், வாழ்விலும் கூட மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

  ஞானஸ்நானத்தின் உண்மைத் தன்மை, அது ஒருவரை எந்த அளவுக்கு உடன்படிக்கைக்குள் கட்டுப்படுத்தி, இறை உறவிலும், சபை உறவிலும் வாழ வைக்கிறது என்பதில் வெளிப்படுகிறது.

  இதை “ORIGINAL”, “DUPLICATE” என்ற உதாரணத்தோடு பார்க்கலாம்.

  பொதுவாக தடுப்பூசி என்பது, நோய் வராமல் தடுக்கும் மருந்து. இதில் “ORIGINAL” மருந்தும் உண்டு, “DUPLICATE” மருந்தும் உண்டு.

  இருவர் அம்மை நோய்க்கு தடுப்பூசி போடுகிறார்கள். அவர்கள் அம்மை நோய் நிறைந்த இடத்தில் சென்று வேலை செய்கிறார்கள்.

  இதில் ஒருவருக்கு அம்மை நோய் தாக்கவில்லை, மற்றொருவரை தாக்கியது.

  அம்மை நோய் தாக்கியவர் விசாரித்தபோது, அவர் போட்ட தடுப்பூசி, “DUPLICATE” என்று தெரிய வந்தது.

  இதுபோலவே ஞானஸ்நானமும், இங்கும் “DUPLICATE”-ம், “ORIGINAL”-ம் இருப்பதைப் பார்க்கிறோம்.

  பிரதிகூலமான சந்தர்ப்பங்கள் வரும் போது, ஞானஸ்நானங்களில் “ORIGINAL” எது, “DUPLICATE” எது என தெரிய வரும்.

    2. திருச்சபை

  திருச்சபையையும், மேலே கூறும் உதாரணங்களோடு நாம் காணலாம்.

  இங்கும், “ORIGINAL” - க்கும், “DUPLICATE” – க்கும் வித்தியாசம் தெரியாத சூழ்நிலைகள் இருக்கின்றன.

  மேலும் விளக்கத்திற்கு,

    Youtube

  மீட்பு – திருமுழுக்கு – திருச்சபை

  மேலும், விளக்கம் தேவைப்பட்டால், தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

  For details please contact - 9443604787.

கேள்வி - 15

Sarujan - Paris

May 23, 2014 AT 9:15 PM

அருட்தந்தை அவர்களே யோகா, தியானம், செய்யலாமா?

    பதில்

  அன்பரே!

  யோகா என்பதும், தியானம் என்பதும் உடல், மன கட்டுப்பாட்டிற்கான ஒரு பயிற்சியே. இதில் சமய சாயம் பூச அவசியமில்லை.

  சில சமய ஆர்வலர்கள், இந்து முறைபடி யோகா, தியானம் என்றும், கிறிஸ்தவ முறைபடி யோகா, தியானம் என்றும் பயிற்சிகளை அளிக்கிறார்கள்.

  இதை எந்த சமய கண்ணோட்ட்த்தோடும் பார்க்க வேண்டாம்.

  சரீரத்தை கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, தியான பயிற்சிகளை நீங்கள் தாராளமாக செய்யலாம்.

  இதில் பெரும்பாலும் இடறல் வராது.

கேள்வி - 16


Srinivasan, Chennai

29/5/2014, Thursday

நான் ஒரு brahmin என் பெற்றோர்களுக்கு ஒரே மகன் என் மனைவி ஒரு கத்தோலிக்க பெண் என் தாய் தந்தையருக்கும் என் மனைவிக்கும் ஒத்துப்போவதிலை. என் தாய் தந்தை நீ உன் மனைவி சொல் கேட்கிறாய் என் மனைவி அவர்கள் எல்லோரிடமும் என்னை குறை கூறுகிறார்கள். எனது கேள்வி ? 1. ஒரு மகன் தன் பெற்றோர்களுக்கு எப்படி இருக்க வேண்டும்? 2. ஒரு மருமகள் எப்படி இருக்க வேண்டும்? 3. ஒரு மாமியார் எப்படி இருக்க வேண்டும் ? 4. ஒரு கணவன் தன் மனைவிக்கு எப்படி இருக்க வேண்டும் ? இதற்கு பைபிள் சொல்லும் வசனமும் விளக்கமும் சொல்லுங்கள்.

    பதில்

  "அன்பு சகோதரதே! தங்கள் கேள்விக்கான பதிலை எங்கள் இணையதளத்தில் “இறை அரசின் நற்குடும்பம்” என்னும் தலைப்பில் இணைத்துள்ளோம். மேலும் விளக்கம் தேவைப்பட்டால் மீண்டும் தொடர்பு கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு அல்லது ஜெப உதவிக்கு இந்த எண்ணை (9443604787) தொடர்பு கொள்ளவும் .

  For details please contact - 9443604787.

கேள்வி - 17


Sarujan, Paris

15/6/2014, Sunday

அருட்தந்தை அவர்களே வணக்கம் , தேவனுடைய தீர்க்கதரிசியாகிய சாமுவேலை ஒரு அஞ்சனம் பார்க்கும் ஸ்திரியால் எப்படி எழுப்ப முடிந்தது?

    பதில்

  அன்பு நண்பரே! தங்களுடைய இந்த கேள்வி, வேதபாடம் சம்பந்தப்பட்டது.

    சவுலின் மனநிலை :

  குறிசொல்பவர் “தீய ஆவியின் துணைகொண்டு” குறிசொல்கிறார் - 1சாமு 28:8.

  சவுல் குறிசொல்லும் கூட்டத்தாரை அழித்தார் - 1சாமு 28:3.

  தனக்கு துன்பம் வந்துற்ற போது, முதலில் சவுல் கடவுளின் உதவியை நாடினார் - 1சாமு 28:4-6.

  கடவுளும் கைவிட்ட நிலையில், மனம் பேதலித்தவராக, தன்னைப் பற்றிய கடவுளின் நிலைப்பாடு என்ன என்று அறிய, குறிசொல்பவளிடம் வந்தார் - 1சாமு 28:7.

    அங்கே நடந்த நிகழ்ச்சி :

  குறிசொல்பவர் தீய ஆவியின் துணையுடனேயே, அதைச் செய்கிறார் என்று பார்த்தோம்.

  குறிசொல்பவர்கள், “இறந்தவர்களின் ஆவிகளோடு பேசுவர்” என்ற ஒரு நம்பிக்கை அந்த நாட்களில் இருந்தது.

  எனவே, சவுலும், இறந்த சாமுவேலின் ஆவியோடு பேச விரும்பினார்.

  ஆண்டவர் கைவிட்டதால், சாமுவேலாவது, ஏதாவது “ஆலோசனை” தருவாரா பார்ப்போம் என்பது, சவுலின் எதிர்பார்ப்பு.

  இங்கே “சாமுவேலின் ஆவி வந்தது” என்பது, “தீய ஆவியின் செயல்” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  ஆனால், அது தீய ஆவியின் செயல் என்றாலும், சவுலின் விஷயத்தில், கடவுள் தீய ஆவியை “தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து” பேச வைத்தார்.

  இது பிலயாமுக்கு கடவுள் செய்ததைப் போன்றது.

  பிலயாம் தீயவனாக இருந்தாலும் - எண் 31:16, பாலாக்கு தீய எண்ணத்தோடு அவனுடைய உதவியை நாடினாலும் - எண் 22:6, கடவுள் பிலயாமை “தமது கட்டுப்பாட்டில் வைத்து” பேச வைத்தார் - எண் 22:12-20.

  அவ்வண்ணமே கடவுள் இங்கும் தம்முடைய திட்டத்தை, குறிசொல்பவள் மூலம், சவுலுக்கு வெளிப்படுத்தினார்.

  For details please contact - 9443604787.

கேள்வி - 18


Sarujan, Paris

15/6/2014, Sunday

அருட்தந்தை அவர்களே , இன்றைய காலகட்டத்தில் தன் மகனுக்கோ / மகளுக்கோ திருமணம் என்றதும் எல்லாரும் நல்ல நாளை பார்கிறார்கள். இன்னும் ஒருசிலர் மறைமுகமாக ஜாதகத்தையும் பார்கிறார்கள் அதுமாதிரமல்லாமல் செய்வினை / ஏவல் என்று பல காரியங்களுக்காக தேவன் செய்யகொடாது என்று சொன்ன காரியங்களை எல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் மற்ற மதத்தினவர்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களும் கூட இப்படிப்பட்ட காரியங்களை செய்கிறார்கள் என்பதை பார்க்கும்போது சற்று கஷ்டமாகத்தான் இருக்கிறது. இது தொடர்பாக தங்கள் விரிவாக விளக்குவீர்களா ?

    பதில்

  அன்பு நண்பரே! தங்களுடைய முதல் கேள்விக்கு விரிவான விளக்கம் கூறுவது சிரமம். காரணம்:

  தாங்கள் கூறும், “ஜாதகம் பார்த்தல்” , “செய்வினை ஏவல்” போன்றவற்றை யார் நம்புகிறார்கள்?

  “கிறிஸ்தவர்களும் இதைச் செய்கிறார்கள்” என்றீர்கள். இந்த “கிறிஸ்தவர்கள்” என்பவர் யார்?

  “மற்ற மதத்தினர்” என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?

  “இவற்றையெல்லாம் செய்யக் கூடாது” என்பவர் யார்?

  • முதலாவது, தாங்கள் கூறும் இந்த “சமய பழக்கவழக்கங்கள்” , அந்தந்த சமயம் சார்ந்தவர்களுடைய “நம்பிக்கை” .

  • அதை செய்ய அந்த சமயம் சார்ந்தவர்களுக்கு உரிமையுண்டு.

  • அவர்கள் “நம்பிக்கை” அவர்களுக்கு விடுதலை தரும்.

  • இரண்டாவது, “கிறிஸ்தவர்கள்” என்று தாங்கள் குறிப்பிடுபவர் யார்?

  • இன்று பல “அமைப்புக்கள்” தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார்கள்.

  • இவ்வாறு “கிறிஸ்தவர்கள்” என்று தங்களைக் கூறுபவர்கள் எல்லாருமே, ஏதாவது ஒரு வகையில் “பைபிளை” மையமாக வைத்தே கூறுவர்.

  • இந்த கிறிஸ்தவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களில் சில, பைபிள் பாரம்பரியங்களை சார்ந்தவை. மற்றும் சில, சபை பாரம்பரியங்களை சார்ந்தவை.

  • இதில், முழுக்க முழுக்க பைபிள் பாரம்பரியத்தை தங்கள் “வாழ்க்கை முறையாக” வைத்துக் கொள்ளும் கிறிஸ்தவர்களுமுண்டு.

  • அதுபோலவே, முழுக்க முழுக்க தங்கள் சபை பாரம்பரியங்களை, “வாழ்க்கை முறையாக” பின்பற்றுபவர்களும் உண்டு.

  • இங்கே, “பைபிளை மையமாகக் கொண்டு” வாழ்பவர்கள், தாங்கள் கூறும் பழக்கவழக்கங்களை ஒருபோதும் செய்யார்.

  • இவர்களை நாம் “ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள்” என்று கூறுகிறோம் - 1கொரி 3:1-3.

  • அவ்வாறே “சில பாரம்பரிய பழக்கவழக்கங்களை மையமாகக் கொண்டு” வாழ்பவர்கள், மேற்சொன்ன காரியங்களை விரும்பிச் செய்வர்.

  • அவர்களுக்கு அது ஒரு “குற்ற உணரிவைத்” தராது. காரணம் , அவர்கள் “இருக்கும் இடமும்” , அங்கே தரப்படும் “உபதேசங்களும்” , “உலகு சார்ந்தவை”.

  • இத்தகையவர்களை “உலக கிறிஸ்தவர்கள்” என்று பார்க்கிறோம் - உரோ 12:1-2.

  • எனவே, தாங்கள் குறிப்பிடும் காரியங்களைச் செய்யும் மந்தைகளுக்கு, அது குற்றமாக இருக்காது.

  • ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாத, சபை மேய்ப்பர்களுக்கு, அது மாபெரும் குற்றம்.

  • ஆண்டவரின் நாளில், “எளிய விசுவாசிகளின்” பாவத்துக்கு காரணமாயிருக்கும் சபைகளுக்கு ஐயோ!

  For details please contact - 9443604787.