"அன்றாட வாழ்வில் திருமுழுக்கு"


Rev.Fr.R.John Josephகுழுத்திருச்சபையின் செயல்பாடுகள்


A. குழுத் திருச்சபை:

 • குழுத்திருச்சபைகள், தாய்த்திருச்சபையின் அஸ்திவார திருச்சபைகள்.

 • திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும், ஏதேனும் ஒரு “குழுத் திருச்சபையில்” தங்களை இணைத்துக் கொள்வர்.

 • அது ஒரு குடும்பத் திருச்சபை போல அவருக்கு அமையும்.

 • தன்னுடைய குடும்பத்தை, திருச்சபையாக கட்டி எழுப்ப, குழுத்திருச்சபைகள், அவருக்கு பயிற்சியும் வழிநடத்தலும் அளிக்கும்.


 • B. குழுத்திருச்சபையில் மூப்பர்கள்:

 • குழுத்திருச்சபையில், விசுவாசமும், அன்பும், பரிசுத்த ஆவியின் வல்லமையும் பெற்ற, முதியோர்கள், மூப்பர்களாக இருப்பர்.

 • அவர்கள், தங்கள் குடும்ப வாழ்விலும், தனி வாழ்விலும், பிறருக்கு விசுவாசத்திலும், அன்பிலும், முன்மாதிரியாயிருப்பர்.

 • மந்தையை வழிநடத்துகின்ற நல்ல மேய்ப்பர்களாக, திருச்சபையின் உறுப்பினர்களை வழிநடத்துவர்.

 • மிகுந்த பொறுமையோடும், ஞானத்தோடும், தெய்வபயத்தோடும், உறுப்பினர்களுக்கு உதவுவர்.


 • C. குழுத்திருச்சபையில் வளர்ச்சி:

 • விசுவாசி, குழுத்திருச்சபையில் தம்முடைய வளர்ச்சியை அனுபவிக்கிறார்.

 • குழுத்திருச்சபையில், வளர்ச்சிக்கான போதனைகள், வழங்கப்படும்.

 • திருமுழுக்கு உடன்படிக்கையில், பின்வாங்கிப்போகாதபடி, குழுத்திருச்சபைகள், விசுவாசியைப் பாதுகாக்கும்.

 • ஒவ்வொரு உறுப்பினருடையவும், நிறை குறைகளை, குழுத் திருச்சபை கண்காணிக்கும்.


 • D. குழுத்திருச்சபையில் ஒப்புரவு:

 • ஒவ்வொரு உறுப்பினரும், திருச்சபைக்கூட்டங்களில் கலந்து கொண்டு, பாவங்களை அறிக்கையிட்டு, தங்கள் அயலாரோடும், கடவுளோடும் ஒப்புரவு செய்துகொள்வர்.

 • குழுத்திருச்சபையில், உடன் சகோதரர்கள் கொடுக்கும் திருத்தங்களை, விசுவாசிகள், தாழ்மையோடு ஏற்றுக் கொள்வர்.

 • பாவ அறிக்கை செய்து, தாழ்ச்சியில் வளர, குழுத்திருச்சபை தரும் வாய்ப்பை, விசுவாசி நன்கு பயன் படுத்திக்கொள்வார்.


 • E. திருச்சபைக் கூட்டங்கள்:

 • திருச்சபை கூடும் நாட்களில், விசுவாசிகள் அதில் தவறாது கலந்துகொள்வர்.

 • மூப்பர்கள், திருச்சபைக்கூட்டங்களை பயனுள்ளதாக அமைப்பர்.

 • திருச்சபைக்கூட்டங்களில், திருமுழுக்கு அனுபவங்களும், திருமுழுக்கு சத்தியங்களும் புதுப்பிக்கப்படும்.


 • F. குழுத்திருச்சபையில் நற்செய்திப்பணி:

 • ஒவ்வொரு விசுவாசியும், தங்கள் திருச்சபையின் வளர்ச்சிக்காக, உழைக்க வேண்டும்.

 • தங்கள் திருச்சபையில், மீட்படைந்தோரை சேர்க்கும் பணியை உறுப்பினர்கள் ஆர்வமாக செய்ய வேண்டும்.

 • மூப்பர்கள் இதற்கு ஊக்கமூட்டி, தங்கள் திருச்சபையின் வளர்ச்சிக்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

 • உறுப்பினர்கள், தங்கள் வீட்டார் அனைவரும், கிறிஸ்துவுடைய உடலின் உறுப்புக்களாக மாறுவதில், ஆர்வம் காட்ட வேண்டும்.

 • ஆத்தும ஆதாயப்பணியில், ஒரு உறுப்பினர், மற்ற உறுப்பினருக்கு எல்லா வகையிலும், ஒத்துழைப்புத் தர வேண்டும்.

 • ஒருவரையாவது மீட்க, எல்லாருக்கும் எல்லாமான, பவுலின் மனநிலையை குழுத்திருச்சபை கொண்டிருக்க வேண்டும்.

 • குழுத்திருச்சபையில், உறுப்பினரைச் சேர்க்கும் பணியில், விசுவாசிகள், குழுவாகவும், தனியாகவும், பாடுபட்டு உழைக்க வேண்டும்.


 • G. குழுத்திருச்சபையும் - சபை ஒழுங்குகளும்:

 • குழுத்திருச்சபையில், சபை ஒழுங்குகளும், விசுவாச சத்தியங்களும், அடிக்கடி நினைவூட்டப்பட வேண்டும்.

 • உறுப்பினர்கள், உடன்படிக்கை வார்த்தைகளுக்கு தங்களை கட்டுப்படுத்த, குழுத்திருச்சபை, தொடர்ந்து ஊக்கமூட்ட வேண்டும்.

 • விசுவாசம், அன்பு, பரிசுத்தத்தில், உறுப்பினர்கள் என்றும் நிலைத்திருக்க, குழுத்திருச்சபை வழிகாட்ட வேண்டும்.


 • H. குழுத்திருச்சபையும் - தாய்த்திருச்சபையும்:

 • குழுத்திருச்சபையின் வளர்ச்சியே, தாய்த்திருச்சபையின் வளர்ச்சி.

 • தாய்த்திருச்சபையின் மூப்பர்கள், குழுத்திருச்சபையிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள்.

 • குழுத்திருச்சபையில், தீர்க்கப்படாத பிரச்சனைகள், தாய்த்திருச்சபையின் கவனத்துக்கு கொண்டு வரப்படும்.

 • தாய்த்திருச்சபையின் வழிநடத்தல்களையும், பணித்திட்டங்களையும், குழுத்திருச்சபைகள் செயல்படுத்தும்.


 • I. குழுத்திருச்சபையும் - திருவிருந்தும்:

 • திருவிருந்துக்கான ஆயத்தத்திலும், திருவிருந்திலும், குழுத்திருச்சபைகள் மிகுந்த ஈடுபாடோடு செயலாற்றும்.

 • ஒவ்வொரு குழுத்திருச்சபை உறுப்பினர்களும், தங்கள் தங்கள் குழுவிலேயே திருவிருந்துக்கான ஆயத்தம் செய்வார்கள்.

 • உறுப்பினர்களை திருவிருந்துக்கு ஆயத்தப்படுத்துவதில், மூப்பர்களுக்கு எல்லா உறுப்பினர்களும், ஒத்துழைப்பு தர வேண்டும்.

 • திருவிருந்து ஆராதனையிலும், குழுத்திருச்சபையாகவே பங்கேற்க வேண்டும்.

 • திருவிருந்து அல்லாத, மற்ற ஞாயிறு ஆராதனைகளிலும் கூட, குழுத்திருச்சபையாகவே, விசுவாசிகள் பங்கேற்க வேண்டும்.

 • பொது வழிபாடுகளிலும், தாய்த்திருச்சபையின் ஏனைய பணிகளிலும், ஒவ்வொரு குழுத்திருச்சபைக்கும், அளிக்கப் படுகின்ற பொறுப்புக்களை, மிக ஆர்வமாக ஏற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டும்.


 • J. குழுத்திருச்சபையும் - திருமுழுக்குக்கு ஆயத்தமும்:

 • குழுத்திருச்சபை விசுவாசிகள், தங்கள் திருச்சபைகளில், உறுப்பினர்களைச் சேர்க்க, மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.

 • இதற்கு, குழுத்திருச்சபையின் மூப்பர்களும், மற்ற உறுப்பினர்களும், ஈடுபாடு காட்ட வேண்டும்.

 • மக்களை திருமுழுக்குக்கு ஆயத்தம் செய்து, அவர்களை தியானத்தில் சேர்த்து, திருமுழுக்கு எடுக்கும் வரையிலும், அந்த திருச்சபை முனைப்போடு பாடுபட்டு உழைக்க வேண்டும்.

 • கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள விசுவாசத்தை இவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்.

 • திருமுழுக்கு நாளன்று, முடிந்தவரை அந்தந்த குழுத்திருச்சபையின் உறுப்பினர்கள், அதில் கலந்து கொள்ள வேண்டும்.


 • K. குழுத்திருச்சபையும் - காணிக்கையும்:

 • தசமபாக காணிக்கை, நம் திருச்சபையில் கூறப்படவில்லை யென்றாலும், திருச்சபை ஒழுங்கிற்கேற்ப, எல்லா விசுவாசிகளும், காணிக்கைகளை ஆர்வமாய் செலுத்த, குழுத்திருச்சபை ஊக்கப்படுத்த வேண்டும்.

 • வார, மாத, ஆண்டு காணிக்கைகளை, விசுவாசிகள் அவரவர் தீர்மானித்தபடியும், அவர்களின் வருமானத்தின் படியும், ஆவியானவரின் தூண்டுதலுக்கு ஏற்பவும் செலுத்த, மூப்பர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

 • இவ்வாறு, காணிக்கை செலுத்துதல் மூலமாக, ஒரு விசுவாசிக்கு கிடைக்கும் ஆசீர்வாதம், அந்த குழுத்திருச்சபைக்கு தடையில்லாமல் வந்து சேரும்.


 • L. குழுத்திருச்சபையும் - வீட்டுக்கூட்டங்களும்:

 • குழுத்திருச்சபை உறுப்பினர்களின், வீடுகளில், திருச்சபையினர் கூடி, வீட்டுக்கூட்டங்கள் அடிக்கடி நடத்த வேண்டும்.

 • இது, உறுப்பினர்களிடையே, அன்பையும், நம்பிக்கையையும், ஐக்கியத்தையும் வளர்க்கும்.

 • குழுத்திருச்சபை உறுப்பினர்களின் வீடுகளில் நடக்கும், நன்மை தீமைகளில், உறுப்பினர்கள் ஆர்வமாய் கலந்து கொள்ள வேண்டும்.

 • இவ்வாறான, கூட்ட விபரங்களை, திருச்சபையின் தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.


திருமுழுக்குச் சடங்கு


தலைவர்:-

அன்பு சகோதரரே!

இப்போது நீங்கள், கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையின் உறுப்பினராக, கடவுளோடு உடன்படிக்கை செய்து கொள்ள, வந்திருக்கிறீர்கள்.

இங்கே கூறப்படும், உடன்படிக்கை வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு, திருமுழுக்குப் பெற, உங்களை அன்போடு அழைக்கிறேன்.மனமாற்றத்தின் திருமுழுக்கு – தி.ப 19:4.


(தந்தையின் பெயரால்)


விசுவாசி:-

 1. தந்தையாகிய இறைவா! அருட்பொழிவின் மூலமாக, நீர் எனக்கு அருளிய உமது “அன்பில்” நிலைத்து, நான், உம்மோடும், என் அயலாரோடும், ஆவியின் கனிகளில் வாழ்வேன் என்று வாக்களிக்கிறேன்.

 2. அவ்வண்ணமே! இன்றுமுதல், என் வாழ்நாள் முழுவதும், நான், உமது விருப்பங்களுக்கு மட்டுமே, கட்டுப்பட்டு வாழ்வேன் என்றும், உலகம், பிசாசு, சரீரத்தின் விருப்பங்களுக்கு ஒருபோதும் கட்டுப்பட மாட்டேன் என்றும், வாக்களிக்கிறேன்.

தலைவர்:-

சகோதரரே உம்மை, தாயின் கருவிலிருந்தே அன்பு செய்து அழைத்த, தந்தையாகிய கடவுளின் பெயரால், நான் உமக்கு திருமுழுக்கு அளிக்கிறேன்.

விசுவாசி:  ஆமென்.

சகோதரரே உம்மை, தாயின் கருவிலிருந்தே அன்பு செய்து அழைத்த, தந்தையாகிய கடவுளின் பெயரால், நான் உமக்கு திருமுழுக்கு அளிக்கிறேன்.பாவமன்னிப்பின் திருமுழுக்கு – லூக் 3:3.


(இயேசு கிறிஸ்துவின் பெயரால்)


விசுவாசி:-

 1. என் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவே! இவ்வுலக வாழ்வில், நீர் கொண்டிருந்த “விசுவாச உறுதியை”, என் எல்லாத் துன்ப வேளையிலும், நானும் கொண்டிருந்து, என் மீட்பில் இறுதிவரை நிலைத்திருப்பேன் என்று, உம் ஆணி பாய்ந்த பாதம் தொட்டு வாக்களிக்கிறேன்.

 2. அவ்வண்ணமே, இன்று முதல், என் வாழ்நாள் முழுவதும், உமது பரிசுத்த உடலாகிய, CPM சபையின் சபை ஒழுங்குகளுக்கு, நான் முழுமையாக கட்டுப்பட்டு, உமது பரிசுத்த உறுப்பாக வளர்வேன் என்று வாக்களிக்கிறேன்.

தலைவர்:-

சகோதரரே உம்மைக், கல்வாரியில் தன் இரத்தத்தால் மீட்டெடுத்த இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், நான் உமக்குத் திருமுழுக்கு அளிக்கிறேன்.

விசுவாசி:  ஆமென்.

(தலைவர் தம் கையை, விசுவாசியின் தலையில் வைக்க, விசுவாசி, தண்ணீரில் மூழ்கி மகனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் உடன்படிக்கை செய்கிறார்).அருட்பொழிவின் திருமுழுக்கு – தி.ப 1:5.


(தூய ஆவியின் பெயரால்)


விசுவாசி:-

 1. எனக்கு துணையாளராக, என்னோடு என்றும் இருந்து, என்னைப் புனிதமாக்கும், தூய ஆவியாம் இறைவா! நான் இனிமேல், எந்த சூழ்நிலையிலும், இந்த உலகத்தால் தீட்டுப்படாமல், பிதாவின் விருப்பத்துக்கு எப்போதும் ஆமென் சொல்லி, “பரிசுத்தமாய்” வாழ்வேன் என்று, வாக்குறுதி எடுக்கிறேன்.

 2. அவ்வண்ணமே! இன்று முதல், என் வாழ்நாள் எல்லாம், உமது துணையோடு, என் CPM திருச்சபையின் தலைவருடைய வழிநடத்தல்களுக்கு, சபை காரியங்களில் முழுமையாக கட்டுப்பட்டு, இந்த பரிசுத்த சபையில், வளர்வேன் என்று, வாக்களிக்கிறேன்.

தலைவர்:-

சகோதரரே உம்மோடு என்றும் இருந்து, உம்மை புனிதப்படுத்தும் தூய ஆவியாம் கடவுளின் பெயரால், நான் உமக்குத் திருமுழுக்கு அளிக்கிறேன்.

விசுவாசி:  ஆமென்.

(தலைவர் தம் கையை, விசுவாசியின் தலையில் வைக்க, விசுவாசி, தண்ணீரில் மூழ்கி, தூய ஆவியாம் கடவுளோடு உடன்படிக்கை செய்கிறார்).முடிவில்:


தலைவர்:-

 • அன்புச் சகோதரரே! கிறிஸ்துவின் பரிசுத்த சபை, இப்போது உம்மை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

 • இன்று நீர், திருமுழுக்கால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்.

 • உம் பாவ இயல்பு, இயேசு கிறிஸ்துவின் சிலுவையோடு, அறையப்பட்டுவிட்டது.

 • இப்போது நீவீர், கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையின் உறுப்பாக மாறியுள்ளீர்.

 • இன்று முதல் நீர், உயிர்த்தெழுந்தவராய், கிறிஸ்துவின் சாயலைத் தாங்கி, “ஆவியின் இயல்புக்கு” கட்டுப்பட்டு வாழ வேண்டும்.

 • இது முதல் நீர், கிறிஸ்துவை தலையாகக் கொண்ட, விண்ணக, மண்ணக, விசுவாசிகளோடு உறவுகொண்டு, பரிசுத்த சபையோடு இணைந்து வாழ, உம்மை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்.

விசுவாசி:  ஆமென்.கோலைக் கடக்கும் சடங்கு:


 • தந்தையாகிய இறைவா என் மீட்பராகிய இயேசுவே! என் துணையாளரான தூய ஆவியே! இன்று முதல் நான், உமது உடன்படிக்கையின் வார்த்தைகளுக்கு, கட்டுப்பட்டு வாழ்வேன் என்று, உமது கோலின் கீழ், கடந்து போய் வாக்குறுதி எடுக்கிறேன்.

 • மேலும், உமது சத்தியங்களையும், சபை ஒழுங்குகளையும், நான் மீறும் போது, என்னையே நான் “சாத்தானுக்கு ஒப்புவிக்கிறேன்” என்பதை, முழு அறிவோடு ஏற்றுக்கொள்கிறேன்.

ஒப்புக்கொடுத்தல் ஜெபம்


குறிப்பு:


 1. திருமுழுக்குப் பெற்றவர்களும், திருமுழுக்குக்கு ஆயத்தமானவர்களும், தினமும் செய்ய வேண்டிய ஒப்புக்கொடுத்தல் ஜெபம்.

 2. முடிந்தவரையில் குடும்பமாக, தங்கள் கரங்களை பைபிளிலே வைத்து, இந்த ஜெபத்தை சொல்வது நலம்.

 3. ஒருவர் சொல்ல, மற்றவர்கள் சேர்ந்து சொல்ல, இந்த ஜெபத்தை, மேலும் அதிக அனுபவத்தோடு செய்யலாம்.“சத்தியத்துக்கு கட்டுப்படுவேன்”


செய்வேன்:


 1. நான் எப்போதும் அன்போடிருப்பேன் - உரோ 12:9,10, 1யோவா 4:11.

 2. ஆவியின் கனிகளில் வளர்வேன் - கலா 5:22, கொலோ 3:12.

 3. நான் எந்த வேளையிலும் பொறுமையோடிருப்பேன் - கொலோ 3:12, 1தெச 5:14.

 4. சகலமும் தாங்குவேன் - 1கொரி 13:7, கலா 6:2.

 5. சகலமும் சகிப்பேன் - 1கொரி 13:7. 6. நான் எல்லாரையும் மன்னிப்பேன் - கொலோ 3:13, எபே 4:32.

 7. பிறருடைய பெலவீனங்களை பொறுத்துக்கொள்வேன் - கொலோ 3:13, 1தெச 5:14.

 8. சாந்தமாய் பழகுவேன் - கொலோ 3:12, பிலி 2:1,1 பேது 3:8.

 9. இரக்கம் காட்டுவேன் - கொலோ 3:12, பிலி 2:1,1 பேது 3:8.

 10. நான் எப்போதும் சந்தோஷமாயிருப்பேன் - 1தெச 5:16. 11. என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்வேன் - 1தெச 5:18.

 12. இடைவிடாமல் ஜெபிப்பேன் - 1தெச 5:17.

 13. நான் பாடுகள் வேளையில் சாந்தமாயிருப்பேன் – உரோ 5:13.

 14. விசுவாசத்தில் நிலைத்திருப்பேன் - வெளி 2:10.

 15. என் வாழ்வில் எல்லாம், கடவுளால் தான் நடக்கிறது என்று நம்புவேன் – 2 சாமு 16:11.

 16. பாடுகள் வேளையில், மனத்தாழ்ச்சியோடிருப்பேன் – மத் 11:28,29.

 17. நான் தவறு செய்தால், உடனே மன்னிப்புக் கேட்பேன் - யோபு 34:32, சீரா 21:1.

 18. பாடுகளை பாவப்பரிகாரமாக ஏற்றுக்கொள்வேன் - 1பேது 4:12,13.

 19. பாடுகள் வேளையில், என் பாவங்களுக்காக பொறுத்தல் கேட்டு ஜெபிப்பேன் – சீரா 38:9,10, யாக் 5:14-16. 20. நான் சண்டை போட்டால், சமாதானம் செய்ய முந்துவேன் - எபே 4:26, நீ.மொ 6:2,3.

 21. சமாதானத்துக்கான வாய்ப்புக்களைத் தேடிக்கொண்டேயிருப்பேன் - 1கொரி 6:7,8.

 22. நான் தவறிழைக்கும்போது, சாக்குப்போக்கைத் தவிர்த்து, மன்னிப்புக் கேட்டு, என்னைத் திருத்திக் கொள்வதில் ஆர்வமாயிருப்பேன் – கலா 6:1, 1யோவா 1:8-10, சீரா 5:7,32:17.

 23. பிறரை, என்னைவிட உயர்வாக மதிப்பேன் - பிலி 2:3, உரோ12:10.

 24. நான் எப்போதும், ஸ்தோத்திர பலியோடிருப்பேன் - எபி 13:15.

 25. என் பாவத்துக்கு எப்போதும் பொறுத்தல் கேட்டுக் கொண்டேயிருப்பேன் – லூக் 18:13, திபா 35:3,5.

 26. பைபிளை, எப்போதும் என் அருகில் வைத்து, வாசித்து தியானிப்பேன் – யோசு 1:8.

 27. நான் இறை பிரசன்னத்திலேயே எப்போதும் இருப்பேன் - நாகூம் 1:5, தி.பா 63:1.

 28. ஆவியானவரின் குரலைக் கேட்பதில், கவனமாயிருப்பேன். - கலா 5:16,18,25.


செய்யமாட்டேன்:


 1. நான் எந்த சூழ்நிலையிலும், சண்டை போடமாட்டேன் – 1கொரி 6:6, சீரா 28:8.

 2. பழி தீர்க்க மனதில் கூட நினைக்கமாட்டேன் - உரோ 12:19,17; 1பேது 3:9.

 3. பகைமை பாராட்டமாட்டேன் – மத் 6:12.

 4. தவறை நியாயப்படுத்தமாட்டேன் - தொ.நூ 4:9.

 5. பிறர் குறை பேசித்திரியமாட்டேன் - சீரா 21:28, உரோ 14:13.

 6. கோள் குண்டணி கூறமாட்டேன் - உரோ 14:4, சீரா 28:13,14.

 7. கட்சி சேர்ந்து, பிறரை எதிர்க்கமாட்டேன் - பிலி 2:3, 1கொரி 1:12.

 8. நான் எப்போதும், சாக்குப்போக்கு சொல்லமாட்டேன் - உரோ 3:19.

 9. என் குற்றங்களை, நியாயப்படுத்தமாட்டேன் – யோபு 40:8.

 10. வீண்பெருமை கொள்ளமாட்டேன் - உரோ 12:3, கலா 5:26.

 11. நான் அகந்தையோடு வாழமாட்டேன் - சீரா 23:4.

 12. தற்பெருமை கொள்ளமாட்டேன் - உரோ 12:16. 13. நான் எவ்வேளையிலும் பொய்சொல்லமாட்டேன் – கொலோ 3:9, சீரா 20:24.

 14. பிறர் பொருளைத் திருடமாட்டேன் - இ.ச 5:21.

 15. பிறர் பெயரைக் கெடுக்கமாட்டேன் - இ.ச 5:20.

 16. பிறர் மனத்தைப் புண்படுத்தமாட்டேன் – யோபு 16:2. 17. நான் சோம்பேறியாயிருக்கமாட்டேன் – 1தெச 5:14, சீரா 22:1,2, 2தெச 3:11.

 18. நான், நேரத்தை வீணாக்கமாட்டேன் – சீரா 51:30.

 19. புறணி பேசி, சண்டைகளுக்கு காரணமாகமாட்டேன் - 1பேது 2:2.

 20. பிறர்மீது, நல்லெண்ணம் இழக்கமாட்டேன்.

 21. பொறாமை கொள்ளமாட்டேன் - கலா 5:26.

 22. நான், என் மனதில், வீண் எண்ணங்களுக்கு இடம் கொடுக்கமாட்டேன் - எபே 4:17.

 23. என் மனதில் எழும் பொறாமை, பகை, வெறுப்பு,போன்ற இச்சைக்குரிய எண்ணங்களை தொடக்கத்திலேயே தவிர்த்து விடுவேன் - எபே 4:31, கொலோ 3:8.

 24. நான் பேசுவது தான் சரி என்று, ஒருபோதும் அடம்பிடிக்கமாட்டேன் – சீரா 5:9-13, 21:26.“சபைக்குக் கட்டுப்படுவேன்”


செய்வேன்:


 1. நான் சபைக்கூட்டங்களுக்கு ஒழுங்காக வருவேன் - எபி 10:25.

 2. கூட்டங்களுக்கு நேரத்துக்கு முந்தியே வந்துவிடுவேன் - சீரா 51:30.

 3. கூட்டங்களுக்கு ஆர்வத்தோடு வருவேன் - உரோ 12:11, 1பேது 2:3.

 4. நேரம் தவறாமையை கடைபிடிப்பேன் - 2கொரி 6:2, எபே 5:16, சீரா 39:16.

 5. எதிலும், ஆண்டவருடைய காரியங்களில் முதலிடம் கொடுப்பேன். மத் 6:33, பிலி 3:8.

 6. நான் சீருடை அணிந்து, ஆராதனைகளில் பங்குகொள்வேன் - மத் 22:11-13.

 7. வீட்டிலிருந்தே சீருடை அணிந்து வருவேன் - வெளி 7:13-17. 8. குழுத்திருச்சபையை நேசிப்பேன் – தி.பா 2:46.

 9. அதன் வளர்ச்சிக்காக உழைப்பேன் - பிலி 2:12, 1தெச 5:11, 1கொரி 14:4.

 10. நான் மூப்பர்களுக்கு பணிந்து நடப்பேன் – எபி 13:17.

 11. வீட்டுக்கூட்டங்களுக்கு ஆர்வமாய் சென்று, உடன் சகோதரங்களை ஊக்கப்படுத்துவேன் - எபி 10:25.

 12. வீடு சந்தித்து, பின்தங்கிய குழுத்திருச்சபையாளரை, உற்சாகப்படுத்துவேன் – உரோ 12:5.

 13. நான் சபை காரியங்களில், அதிக ஆர்வம் காட்டுவேன் - 2கொரி 8:17, 9:1,2.

 14. சபை காரியங்களை, என் சொந்த குடும்பக்காரியங்கள் போல, ஈடுபாடோடு பார்ப்பேன் - தி.தூ 12:12.

 15. சபை வளர்ச்சிக்காக உழைப்பேன் – எபே 4:15.

 16. குழுத்திருச்சபையில், ஐக்கியப்பட்டு, செயல்படுவேன். 17. நான், நற்செய்தி ஊழியத்துக்கு ஆர்வம் காட்டுவேன் - 2கொரி 8:17-18.

 18. மக்கள், விடுதலை தியானத்தில் கலந்துகொள்ள உழைப்பேன்.

 19. அனேகரை, ஞானஸ்நானத்துக்கு அழைத்து வருவேன் - 1கொரி 9:22, 2கொரி 11:2. 20. ஆண்டவருக்கு காணிக்கை செலுத்துவதில், நான் ஆர்வமாய் இருப்பேன் - வி.ப 23:15.

 21. ஆண்டவருக்கு காணிக்கை செலுத்துவதை, ஒரு பாக்கியமாகக் கருதுவேன் - இ.ச 10:16.

 22. நானும், எனக்கு கடவுள் தருவதும், கடவுளுக்கே சொந்தம், என்ற மனநிலையோடு, காணிக்கை செலுத்த முந்துவேன் - வி.ப 22:5.

 23. நான் தவறாமல், காணிக்கை செலுத்துவதில், முதல் ஆளாயிருப்பேன் - இ.ச 16:10,17. 24. நான் எப்போதும், எந்த இடத்திலும், நான் ஒரு சபை விசுவாசி என்ற உணர்வோடு இருப்பேன் – எபே 5:15.

 25. விசுவாசத்திலும், கனிகளிலும், பிறருக்கு முன்மாதிரியாயிருப்பேன் – உரோ 15:5, 2தெச 3:9. 26. சபையில், ஒழுக்கம் மீறினால், பொது மன்னிப்புக் கேட்பதில் முந்துவேன் - தி.பா 32:3,5.

 27. குழுத்திருச்சபையில், என் பாவங்களை அறிக்கையிடுவதில், தயங்கமாட்டேன் – யாக் 5:15,16.

 28. நான் பிறர் இரகசியங்களைக் காப்பேன் - சீரா 19:6-12.

 29. திருவிருந்தில், பங்குகொள்ள, நித்தம் என்னை ஆயத்தப்படுத்துவேன் - 1கொரி 11:27-31.

 30. என் எந்த குறைகளையும், உடனுக்குடன் குழுத்திருச்சபையில் அறிக்கையிட்டு, என்னை பரிசுத்தமாய், வைத்துக்கொள்வேன் – சீரா 5:7. 31. திருவிருந்துக்கான ஆயத்தக்கூட்டத்தில், தவறாது கலந்து கொள்வேன் - 1கொரி 11:28.

 32. சபை மூப்பர் தரும், திருத்தங்களை மகிழ்வோடு ஏற்பேன் – யோபு 5:17.

 33. தவறிழைப்பதில், அச்ச உணர்வோடிருப்பேன் - எபி 10:26.செய்யமாட்டேன்:


 1. நான் சபை ஒழுங்கை மீறும்போது, சாக்குப்போக்கு கூறமாட்டேன் – சீரா 32:17.

 2. நான் வேறு கோயில்களுக்கு ஆராதனைக்கு செல்லமாட்டேன் - 2கொரி 6:15,16.

 3. நான் வேறு உபதேசங்களைக் கேட்கமாட்டேன் - கலா 1:8,9.

 4. சபையில், பொய் சொல்லமாட்டேன் - எபே 4:25.

 5. நான் காணிக்கை செலுத்துவதில், கணக்குப்பார்க்க மாட்டேன் - லூக் 6:38.

 6. காணிக்கை செலுத்துவதில், முறுமுறுக்கமாட்டேன் - மலா 3:8.

 7. ஆடை அணிகலன்களால், ஆடம்பரம் கூட்டமாட்டேன் - 2கொரி 9:7.

 8. நான் வீண்பெருமை காட்ட, உடுத்தொருங்கி நடக்கமாட்டேன் - 1பேது 3:1-5.

 9. என் குடும்பத்திலும், பிள்ளைகளை, ஆபாச உடை உடுத்தி, அழகுபார்க்கமாட்டேன் - 1பேது 3:1-5.

சபை ஒழுங்குகளை புதுப்பித்தல்1. நான் சபை ஆராதனையில், நேரத்திற்கு முந்தியே தவறாமல் பங்கு கொள்வேன்:


வசனம்:-  சிலர் வழக்கமாகவே, நம் சபை கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது. ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக – எபி 10:25.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! எப்போதெல்லாம் சபை கூடுகின்றதோ, அப்போதெல்லாம், நான் தவறாமல் நேரத்தோடு அதில் பங்கு கொள்வேன்.

---------------------------------------------------------

2. நான் வீட்டுக்கூட்டங்களில் ஆர்வத்தோடு பங்கெடுப்பேன்:


வசனம்:-  மாற்குவின் தாய் மரியாவின் வீட்டில் பலர் ஒருங்கிணைந்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தனர் - தி.தூ 12:12.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! நான் என் வீட்டில் கூட்டங்கள் நடத்தி, பிற வீட்டுக்கூட்டங்களில் தவறாது கலந்து கொள்வேன்.

---------------------------------------------------------

3. நான் பலிவிருந்துக்கான ஆயத்தகூட்டத்தில் தவறாமல் பங்கு பெற்று, பலிவிருந்தில் கலந்து கொள்வேன்:


வசனம்:-  எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது கிண்ணத்திலிருந்து பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராக குற்றம் புரிகிறார் - 1கொரி 11:27.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! நான் பலிவிருந்துக்கு முந்திய நாளே, உபவாசமிருந்து, பாவ அறிக்கையிட்டு, என்னை சபையில் தகுதிப்படுத்தி, மறுநாள், பலிவிருந்தில், குறிப்பிட்ட நேரத்தில், தவறாது கலந்து கொள்வேன்.

---------------------------------------------------------

4. என் திருச்சபையின் வளர்ச்சிக்காக, அயராது உழைப்பேன், ஜெபிப்பேன்:


வசனம்:-   பேதுரு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காக கடவுளிடம் உருக்கமாக வேண்டியது – தி.தூ 12:5.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! நான் என் CPM திருச்சபையின் வளர்ச்சிக்காக, அயராது உழைப்பேன், ஜெபிப்பேன்.

---------------------------------------------------------

5. அவிசுவாசிகளோடு, நான் நெருங்கிய உறவு வைக்கமாட்டேன்:


வசனம்:-  நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களை பிணைத்துக் கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? – 2கொரி 6:14.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! நான் என் விசுவாச வாழ்வில், எந்த சூழ்நிலையிலும், அவிசுவாசிகளோடு நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள மாட்டேன்.

---------------------------------------------------------

6. சபையில், பின்வாங்கும் விசுவாசிகள் மட்டில், எச்சரிக்கையாய் இருப்பேன்:


வசனம்:-  தீயவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வையுங்கள் - 1கொரி 5:13; தீயவரோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் - 1கொரி 5:9,11.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! என் சபையின் உறுப்பினர்களில், விசுவாசத்தில் பின்வாங்கியவர்களின் மட்டில், நான் எச்சரிக்கையாக இருப்பேன்.

---------------------------------------------------------

7. வேறு சபை ஆராதனைகளுக்கு சென்று, வேற்று போதனைகளை ஏற்கமாட்டேன்:


வசனம்:-  கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து, உங்களை அழைத்த கடவுளை விட்டுவிட்டு, இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக்கொண்டு விட்டீர்களே, எனக்கே வியப்பாக இருக்கிறது – கலா 1:6.

வசனம்:-   நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தினின்று, மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக – கலா 1:8.

தீர்மானம்:  நான் எந்த சூழ்நிலையிலும், வேறு சபைகளோடு உறவு வைத்துக்கொள்ள மாட்டேன். என் சபையில் தரப்படும் போதனைகளை அன்றி, வேறு போதனைகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

---------------------------------------------------------

8. என் திருச்சபையின் தலைவர்களுக்கு பணிவோடு கீழ்ப்படிவேன்:


வசனம்:-  உங்கள் தலைவர்களுக்கு கீழ்படியுங்கள், அவர்களுக்கு பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப் பற்றி கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால், உங்கள் நலனில் விழிப்பாயிருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும் படி நடந்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு மனதுயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது – எபி 13:17.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! நான் CPM திருச்சபையின் தலைவர்களுக்கு, என்றும் பணிவோடு கீழ்ப்படிந்து நடப்பேன்.

---------------------------------------------------------

9. நான் சபைக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை, தவறாமல் ஆர்வமாக அளிப்பேன்:


வசனம்:-   ஆர்வத்தோடு கொடுத்தால், தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும், அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக, யாரும் கொடுக்க வேண்டியதில்லை – 2கொரி 8:12.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! நான் CPM சபைக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை, ஆர்வத்தோடு தவறாமல் செலுத்துவேன்.

---------------------------------------------------------

10. நான் தவறாமல், நற்செய்தி ஊழியத்தில் பங்கேற்று, ஆத்தும ஆதாயம் செய்வேன்:


வசனம்:-  நற்செய்தி அறிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஜயோ எனக்கு கேடு – 1கொரி 9:16.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! நான் என் சபையில், அனேக உறுப்புகளை உருவாக்க, தவறாது மீட்பின் ஊழியம் செய்வேன்.

---------------------------------------------------------

11. நான் என் குடும்ப வாழ்வில், அனைவருடனும், பாதம் கழுவும் அன்போடு வாழ்வேன்:


வசனம்:-  உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்பு கொள்வது போல, தம் மனைவி மீதும் அன்பு செலுத்த வேண்டும், மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும் - எபே 5:33.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! நான் என் குடும்ப வாழ்வில், ஆவியின் கனிகளோடும், பணிவோடும் வாழ்ந்து, பிறருக்கு முன்மாதிரியாக இருப்பேன்.

---------------------------------------------------------

12. நான் என்னைச் சுற்றி வாழும், மக்களுக்குமுன், மிகுந்த முன்மாதிரியாய் இருப்பேன்:


வசனம்:-  அடுத்தவருடைய நன்மைக்காகவும், வளர்ச்சிக் காகவும் செயல்பட்டு, அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள் - உரோ 15:2.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! நான் என்னைச் சுற்றி வாழும் பிற மக்களோடு, அன்போடும் கனிகளோடும் வாழ்வேன்.

---------------------------------------------------------

13. நான் என் சபையின் உடன் உறுப்புக்களோடு நல்லுறவுகொண்டு, அவர்கள் வளர்ச்சிக்காக உழைப்பேன்:


வசனம்:-  சபையார், ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத்திருத்துங்கள்; அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் - கலா 6:1.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! நான் சபையில் என் உடன் உறுப்புக்களோடு, நல்லுறவு கொண்டு, அவர்களின் வளர்ச்சிக்காக உழைப்பேன்.

---------------------------------------------------------

14. நான் சீருடை அணிவதிலும், எளிய வாழ்க்கையிலும், ஆர்வம் காட்டி வாழ்வேன்:


வசனம்:-  முடியை அழகுப்படுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல், போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல, மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே, உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது – 1பேது 3:3,4.

தீர்மானம்:  என் அன்பு இயேசுவே, என் உடன் உறுப்புக்களே! நான் சபைக் கூட்டங்களுக்கு வரும்போது, தவறாமல் சீருடைகளை அணிவேன். என் இல்லத்தில் பூ பொட்டு, ஆடம்பர அலங்கார வாழ்க்கையை தவிர்த்து, என் உடன்படிக்கைக்கு சாட்சியாக வாழ்வேன்.

---------------------------------------------------------

ஏழு படிகள் தியானம்1. அறிவுத் தெளிவு - 1பேது 4:7; 5:8.


வசனம்:
 1. இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு, கட்டுப்பாடோடும், “அறிவுத் தெளிவோடும்” இருங்கள் - 1பேது 4:7.

 2. உங்கள் எதிரியாகிய அலகை, யாரை விழுங்கலாம் என, கர்ச்சிக்கும் சிங்கம் போல் தேடித்திரிகிறது. எனவே, “அறிவுத் தெளிவோடு” விழிப்பாயிருங்கள் - 1பேது 5:8.

 3. “ஊதாரிமகன் அறிவுத் தெளிவு பெற்று”, தந்தையிடம் திரும்பினான் - லூக் 15:17.

சிந்தனை:
 1. நான் இயேசு கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையின் உறுப்பாயிருக்கிறேன்.

 2. ஆனால், பலமுறை என் மனம், ஊனியல்புக்கு அடிமைப்பட்டு, ஆவியானவரிடமிருந்து தூரம் போயிருக்கிறேன்.

 3. பன்றிக்குழியில் பாவ – சாபங்களுக்கு அடிமைப்பட்டிருக்கிறேன்.

 4. எனக்காக ஜீவனையும் தந்து, என்னை மீட்ட என் இயேசுவை, நான் மீண்டும் நினைக்கிறேன்.

 5. இனி நான், எனக்காக வாழாமல், எனக்காக மரித்துயிர்த்த, அவருக்காகவே வாழ இதோ வருகிறேன்.

---------------------------------------------------------


2. மனத்தாழ்ச்சி – மீக் 6:8.


வசனம்:
 1. மனத்தாழ்ச்சியை ஆடையாக அணிந்து கொள்ளுங்கள் - 1பேது 5:5,6; யாக் 4:10.

 2. மானிடா! நீ மனத்தாழ்ச்சியோடு நடந்து கொள்வதைத் தவிர, ஆண்டவர் உன்னிடமிருந்து, வேறு எதை எதிர்பார்க்கிறார் - மீக் 6:8.

 3. நான் மனத்தாழ்ச்சியும், கனிவும் உள்ளவனென்று, என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் - மத் 11:29.

சிந்தனை:
 1. இறுமாப்பு என்னை அலைக்கழிக்கிறது; அகந்தை என்னை வாட்டுகிறது.

 2. தற்பெருமையால் நான், சத்தியங்களை விட்டு தூரம் போனேன்.

 3. இறுமாப்பால், இறையச்சம் இல்லாமல் வாழ்ந்தேன்.

 4. இயேசுவே, இதோ வருகிறேன்; உம்மிடமிருந்த மனத்தாழ்மையோடு நானும் வாழ, இப்போதே உம்மிடம் வருகிறேன்.

---------------------------------------------------------


3. இறை அருள் - நீமொ 3:34.


வசனம்:
 1. கடவுளுடைய கிருபையை அடைய, அவரை அணுகிச் செல்வோம் - எபி 4:16.

 2. கிறிஸ்துவின் வழியாய், கடவுளுடைய கிருபை, நமக்கு வெளிப்பட்டது – தீத் 2:11.

 3. தாழ்ச்சியுள்ளவர்களுக்கோ, கடவுள் தம் இரக்கத்தை பொழிகிறார் - 1பேது 5:5,6.

சிந்தனை:
 1. என் அசட்டையான வாழ்க்கையால், நான் பலமுறை, ஊனியல்புக்கு அடிமையானேன்.

 2. இதனால், கடவுளின் இரக்கத்துக்கு தகுதியற்றவனானேன்.

 3. இறுமாப்பினால் நான் இழந்த “தேவ கிருபையை”, என் மனத்தாழ்ச்சியால், மீண்டும் பெற்றுக்கொள்ள இதோ வருகிறேன்.

---------------------------------------------------------


4. விசுவாசம் -பிலி 1:29.


வசனம்:
 1. நாம் விசுவசிப்பதற்கு, நமக்கு தேவ கிருபை அருளப்பட்டுள்ளது – பிலி 1:29.

 2. ஆண்டவரிடம் கொள்ளும் விசுவாசத்தில், நாம் பாவமன்னிப்பு அடைகிறோம் - தி.ப 10:43.

 3. தேவக்கிருபையினால், விசுவாசத்தின் வழியாய், நாம் மீட்கப்பட்டோம் - எபே 2:8.

சிந்தனை:
 1. விசுவாசமின்மையால், நான் பலமுறை பின்வாங்கிப் போயிருக்கிறேன்.

 2. துன்ப, நெருக்கடிகளில், என் விசுவாசத்தில் உறுதியில்லாமல், நான் சோதனையில் வீழ்ந்திருக்கிறேன்.

 3. ஆனால், தேவக்கிருபையினால், இன்று நான் மீண்டும் விசுவாசத்தில் திடம் பெற்றுள்ளேன்.

 4. விசுவாசம் எனும் படியில், திடமாக நிலைத்து நின்று, நான் மீட்பை சொந்தமாக்கிக் கொள்ள இதோ வருகிறேன்.

---------------------------------------------------------


5. மீட்பு - தி.ப 16:31.


வசனம்:
 1. இயேசு எல்லோருக்கும், சிறப்பாக விசுவசிப்போர்க்கு மீட்பர் - 1திமொ 4:10.

 2. அம்மா! உனது விசுவாசம் உன்னை மீட்டது – லூக் 7:10.

 3. கிறிஸ்து மீது கொண்ட விசுவாசத்தால், நீ மீட்புக்கு வழிநடத்தப் படுகிறாய் - 2திமொ 3:15.

சிந்தனை:
 1. பலமுறை, நான் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர் என்ற உணர்வே இல்லாமல் இருந்திருக்கிறேன்.

 2. என் விசுவாசக்குறைவே இதற்குக் காரணம்.

 3. என் ஜெப வாழ்வு குறையும் போது, என் விசுவாசத்தில் தளர்கிறேன்.

 4. தளர்ந்து போன விசுவாசத்தால், நான் மீட்பை இழந்துவிடுகிறேன்.

 5. இன்று இதோ! நான் தேவக்கிருபையால், விசுவாசத்தில் உறுதியடைந்து, மீட்பின் படியில் நிலைத்திருந்து, என் திருமுழுக்கு வாழ்வுக்குள் அடியெடுத்து வைக்க வருகிறேன்.

---------------------------------------------------------


6. திருமுழுக்கு – தி.ப 2:41.


வசனம்:
 1. இறைவார்த்தையை விசுவசித்து, ஏற்றுக்கொண்டவர்கள், திருமுழுக்குப் பெற்றார்கள் - தி.ப 2:41.

 2. சமாரியர்கள் விசுவாசம் கொண்டு, திருமுழுக்குப் பெற்றனர் - தி.ப 8:12,13.

 3. கொரிந்தியர்களுள் பலர், விசுவாசம் கொண்டு திருமுழுக்குப் பெற்றனர் - தி.ப 18:8.

சிந்தனை:
 1. விசுவசித்து மீட்படைந்த நான், திருமுழுக்கால் கடவுளோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்.

 2. என் மீறுதல்களால், பலமுறை, திருமுழுக்கு உடன்படிக்கையை நான் முறித்துள்ளேன்.

 3. ஆனால், இன்று நான் இயேசுவின் மேல் கொண்ட விசுவாசத்தில் உறுதியடைந்து, என் திருமுழுக்கு உடன்படிக்கையை புதுப்பிக்கிறேன்.

 4. நான் திருமுழுக்கு எனும் படியில், உறுதியாய் நின்று, திருச்சபையாகிய கிறிஸ்துவின் உடலோடு ஒன்றிக்க, தொடர்ந்து வருகிறேன்.

---------------------------------------------------------


7. திருச்சபை – 1கொரி 12:13.


வசனம்:
 1. கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி, நீங்கள் திருமுழுக்குப் பெற்றீர்கள் - கலா 3:27.

 2. நாம் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால், அவரது உடலின் உறுப்பாயிருக்கிறோம் - உரோ 12:5.

 3. கிறிஸ்துவின் உடலே திருச்சபை – எபே 1:22,23.

சிந்தனை:
 1. நான் சபைக்கட்டுப்பாடுகளை மீறியதாலும், விசுவாச உடன்படிக்கையில் நிலைக்காததாலும், என் திருச்சபைக்கு ஊறு விளைவித்தேன்.

 2. திருச்சபையில், என் திருமுழுக்கு வாழ்வாகிய அன்பு, விசுவாசம், பரிசுத்தத்தில் தளர்ச்சியுற்று, பின்வாங்கினேன்.

 3. இதோ! மீண்டும் ஒருமுறை, என் திருச்சபையோடு எனக்குள்ள உறவை புதுப்பித்துக் கொள்கிறேன்.

 4. நான் சபைக்கட்டுப்பாடுகளோடு வாழ்ந்து, விசுவாசத்திலும், கனிகளிலும், நிலைத்திருந்து, கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையில், ஒரு பெலமுள்ள உறுப்பாக வாழ்வேன். ஆமென்.

---------------------------------------------------------

Table of Contents